பாபா எம்முடன் தான் இருக்கிறார்

மக்களை நல்வழிப்படுத்த. உலகில் அவ்வப்போது ஞானிகளும், அவதார புருஷர்களும், சித்தர்களும், மகான்களும் தோன்றுவதுண்டு. தாங்கள் அவதரித்த நோக்கம் நிறைவேறியதுடன் மீண்டும் தாங்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த இடத்துக்கு மீண்டும் சென்றுவிடுவதுண்டு. இவர்கள் தங்களது பிறப்பின் ரகசியம்! எங்கே? எப்போது? தோன்றுவது என்பது மட்டுமல்ல, தங்களது வாழ்வின் இறுதிநாளையும் அறிந்து வைத்திருந்தார்கள். அப்படிப்பட்டவர்தான். நாம் வாழ்ந்த காலத்தில் தோன்றிய, கண்கண்ட ஒரு அவதார சித்தர், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா. இவரது 95வது ஜனனதினம் இன்று 23ம் திகதி திங்கட்கிழமை.

எத்தனையோ அவதாரங்கள் மனிதர்களாகத் தோன்றி மறைந்தாலும். அதில் ஒரு சிலர்தான் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் பக்தர்களின் இதயங்களில் நிலைத்துநிற்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த அவதாரங்கள் மானிட சேவையாக சாதனைகள் புரிந்துவிட்டால், அவர்களை தெய்வத்துக்கு ஈடாக வணங்குவதுண்டு.

அதாவது மனிதனும் தெய்வமாகலாம். அப்படிப்பட்ட மகான் ஸ்ரீ சத்ய சாயி பாபா. அவரது புகழும். சாதனைகளும் இன்றும் பேசப்படுகிறது.

அவதார சித்தர்கள் தெய்வங்களில் வாழுகின்ற உருவங்கள். நம்முடைய உடலை ஆத்மாவோடு ஒன்றிடச் செய்ய, அவர்கள் ஒரு மனித உருவை எடுத்து வருகிறார்கள். இவர்கள் இந்த உடல் ஆத்மாவை உணரக் காரணமாக இருக்கிறார்கள். சிலர் சித்தர்களை கடவுளின் தூதுவர்கள் என்பார்கள். ஆனால் அவர்கள் தெய்வங்களின் அவதாரங்கள் என்பதை அறிவதில்லை. பகவான் கிருஷ்ணர் “மகான்கள் இறைவனின் வாழும் உருவங்கள்” என்று எடுத்துக்கூறியுள்ளார்.

சாயி பக்தர்களுக்கு நம்பிக்கையும், பொறுமையும் கண்டிப்பாகத் தேவை. பக்தி திடமாகவும், மனமானது இடம் விட்டு இடம் தாவாது இருத்தல் வேண்டும். சத்ய சாயியும் சீரடி சாயியும் ஒருவரே! என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் பகவானின் அருளும் அனுக்கிரகமும் கிட்டும்.

அவதாரங்கள் சமாதிநிலையை அடைந்தாலும், அவர்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் அவர்களது இடைவெளியை நிரப்புவதற்கு யாரையும் அவர்கள் நியமிப்பதில்லை.

கொடிய நோயின் தாக்கம், உலகமெங்கும் பரவியுள்ளது. பயம் ஒரு பக்கம் வாட்டுகிறது. பொருளாதாரம் மறுபக்கம் தாக்குகிறது. இன்று எதையோ இழந்த உணர்வில் பல பக்தர்கள் இருக்கின்றனர். ஆனால் பாபா எம்முடன் தானிருக்கிறார் என்பதை, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா நமக்கு விட்டுச் சென்ற, பாரம்பரியத்தை புரிந்துகொண்டால், சோர்வடைந்த மனதுக்கு முழுத்தெளிவு கிடைக்கும். அந்தப் பாரம்பரியம் பாபாவின் அன்பு, பாபாவின் சேவை, பொருளியல் ரீதியில், அறக்கட்டளை மூலம், பாபாவினால் உருவாக்கப்பட்ட கல்வி மற்றும் மருத்துவ திட்டங்கள், பாபாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மனித மேம்பாட்டு கல்வி முறையாகும்.

இன்றைய காலகட்டத்தில், பாபாவின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட முடியாத சூழ்நிலை. அவரது 95வது பிறந்தநாள் பிராத்தனையாக, அந்த கொடிய நோய் கொரோனா, உலகிலிருந்து விடைபெற வேண்டும் என்று பிரார்த்திப்போமாக. சாயி பக்தர்கள் தங்களது வீடுகளிலிருந்து வழிபடவேண்டிய ஒரு கட்டாயம். பாபா இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையுடன், சாயி நாமத்தை உச்சரிக்கும்போது, அவரது ஆசி அனைவரையும் வந்தடையும். கொழும்பு புதுச்செட்டித்தெருவிலுள்ள சாயிநிலையத்தில், ஆராத்தியுடன் பூஜைகள் அமைதியாக, அனைத்து சாயி பக்தர்களின் பூரண நலங்களுக்காக இடம்பெறும்.


Add new comment

Or log in with...