ஜோர்ஜியாவில் மறுவாக்கு எண்ணிகையிலும் பைடன் வெற்றி: டிரம்புக்கு மேலும் பின்னடைவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை மறுத்து டொனால்ட் டிரம்ப் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ஜோர்ஜியா மாநில மறு வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றியீட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜோர்ஜியாவில் பைடன் 12,284 வாக்குகள் வித்தியாசத்தில் பதவியில் உள்ள ஜனாதிபதி டிரம்பை தோற்கடித்திருப்பதாக அந்த மாநிலம் குறிப்பிட்டுள்ளது.

இதனை அடுத்து டிரம்பை ‘நம்ப முடியாத அளவுக்கு பொறுப்பற்றவர்’ என்று சாடிய பைடன், தாம் தோற்றிருப்பதை டிரம்ப் தெரிந்தே இருக்கிறார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும் என்றார்.

ஜோ பைடன் வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு தயாராகி வருகிறார்.

கடந்த நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பைடன் மொத்த வாக்கு எண்ணிக்கையில் டிரம்பை விடவும் 5.9 மில்லியன் அதிக வாக்குகளை வென்றிருப்பதோடு, வெற்றிக்கு 270 தேர்தல் சபைகள் தேவையாக இருக்கும் நிலையில் அவர் 306 இடங்களை கைப்பற்றி இருப்பது கணிப்பகள் மூலம் உறுதியாகிறது. டிரம்பினால் 232 இடங்களையே வெல்ல முடிந்துள்ளது. எனினும் ஜோர்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகவும், அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை.

எனினும் ஜோர்ஜியா மாநிலத்தில் டிரம்புக்கும், பைடனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் இருந்ததால் மறு வாக்கு எண்ணிக்கைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன.

இந்நிலையில் கைகளால் எண்ணப்பட்ட வாக்குகளும் பைடனின் வெற்றியை மாற்றவில்லை என்று ஜேர்ஜியாவின் மாநிலச் செயலாளர் பிரெட் ரபன்பேர்க்ர் குறிப்பிட்டுள்ளார். வெற்றியாளரை இயந்திர வாக்கு எண்ணிக்கை துல்லியமாக தெரிவித்ததை, மறு வாக்கு எண்ணிக்கை உறுதிப்படுத்தியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்மூலம், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜோர்ஜியா மாநிலம் ஜனநாயக கட்சியின் வசம் சென்றுள்ளது. 30 ஆண்டுகளில் முதல்முறையாக வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் என்ற பெருமையை ஜோ பைடன் பெற்றுள்ளார்.

எனினும் தேர்தலில் மோசடி இடம்பெற்றதான நிலைப்பாட்டில் டிரம்ப் உதவியாளர்கள் தொடர்ந்து உறுதியாக உள்ளனர். டிரம்பின் பிரத்தியேக வழக்கறிஞர் ரூட் கிலியன் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, டிரம்பின் வெற்றியை புரட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். எனினும் தமது கூற்றை உறுதி செய்வதற்கு உறுதியான ஆதாரங்களை முன்வைக்க டிரம்ப் தரப்பு மீண்டும் ஒருமுறை தவறிவிட்டது.


Add new comment

Or log in with...