2021 வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 2/3 இனால் நிறைவேற்றம் | தினகரன்

2021 வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 2/3 இனால் நிறைவேற்றம்

2021 வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 2/3 இனால் நிறைவேற்றம்-Second Reading of the Budget 2021 Passed With 2-3 Majority

- ஆதரவு 151; எதிர் 52 வாக்குகள்
- திங்கட்கிழமை 3ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான  பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு  2/3 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் வழங்கப்பட்டதற்கு அமைய 2/3 பெரும்பான்மையுடன் 99 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

இரண்டாம் வாசிப்பிற்கு ஆதரவாக எதிரணி பாரளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே,அலிசப்ரி ரஹீம் உள்ளிட்டோர் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமரினால் வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் நவம்பர் 18ஆம் திகதி முதல் இன்று 21ஆம் திகதி வரை வரவுசெலவுத்திட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.

இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) பிற்பகல் 5 மணிக்கு  இலத்திரனியல் முறையில் இடம்பெற்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல்  மூன்றாம் வாசிப்பு வரவுசெலவுதிட்ட குழுநிலை விவாதம் ஆரம்பமாகி டிசம்பர் 10ஆம் திகதி வரை நடத்தப்படும். டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

வரவு செலவுத் திட்டம் 2021
பொதுஜன பெரமுன அரசாங்கத்தின்  முதலாவது  வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

2021ஆம் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட பின்னர், ஒக்டோபர் 20ஆம் திகதி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படும் இந்த வரவு செலவுத்திட்டம்  இந்நாட்டின் 75வது வரவுசெலவுத்திட்ட அறிக்கையாகும்.

2021ஆம் நிதி ஆண்டிற்காக  2,678 பில்லியன் ரூபா ஒதுக்குவதற்கும் , இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ 2,900 பில்லியன் ரூபா வரையறைக்கு உட்பட்டதாகக் கடன்களைத் திரட்டுவதற்காகவும் ஒதுக்கீட்டுச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக விசேட சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்றைய பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகிறது. (பா)

(ஷம்ஸ் பாஹிம், நிசாந்தன் சுப்ரமணியம்)


Add new comment

Or log in with...