லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட நிரபராதிகள் என தீர்ப்பளித்து விடுதலை | தினகரன்

லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட நிரபராதிகள் என தீர்ப்பளித்து விடுதலை

விஹாரைகளுக்கு சில் துணி பகிர்ந்தளிப்பு விவகார வழக்கு;

மேன்முறையீட்டு  நீதிமன்றம் நேற்று  அதிரடி தீர்மானம்

சில் துணி விவகார வழக்கில் குற்ற வாளியாக்கப்பட்டிருந்த லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

சில் துணி விவகார வழக்கு தொடர்பில் குற்றவாளியாக்கப்பட்டு கொழும்பு உயர்நீதிமன்றம் வழங்கிய மூன்று வருட சிறைத்தண்டனை மற்றும் தண்டப் பணத்திலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகியோரே அந்த குற்றங்களிலிருந்து நிரபராதியாக்கப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்டனர்

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இவ்வாறு விடுதலையளித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நாடளாவிய ரீதியில் விகாரைகளுக்கு சில் துணி பகிர்ந்தளித்ததன் மூலம் அரசாங்கத்துக்குச் சொந்தமான 600 மில்லியன் ரூபா நிதியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அதன்மூலம் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாகவும் அவர்கள் குற்றவாளிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களால் தம்மை அக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டுக் கிணங்க நேற்றைய தினம் நீதிமன்றம் அதற்கான தீர்ப்பை வழங்கியுள்ளது.

குமுதினி விக்கிரமசிங்க மற்றும் தீபிகா அபேரத்ன ஆகியோர் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாமினால் நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி மேன்முறையீட்டு மனு தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த 13ஆம் திகதி வழங்கப்படவிருந்த நிலையில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குட்பட்ட பொலீஸ் பிரிவில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணத்தால் அந்த தீர்ப்பு வெளியிடப்பட்டிருக்கவில்லை. நேற்றைய தினத்துக்கு அந்த தீர்ப்பு ஒத்திப்போடப்பட்டிருந்தது.

தமக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனை, சட்டத்திற்கு முரணானது என்றும் தம்மை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம்

அனுஷ பெல்பிட்ட ஆகியோர் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாடளாவிய ரீதியில் உள்ள விகாரைகளுக்கு சில் துணி பகிர்ந்த ளிப்பதற்காக அரசாங்கத்திற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபா நிதியை துஸ்பிரயோகம் செய்ததாகவும் அதனால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டி அவர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதிகள் குழாம் மேற்படி வழக்கின் மனுதாரர் தரப்பினர் மற்றும் சட்ட மாஅதிபரினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை விரிவாக பகுப்பாய்வு செய்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...