அல்லாஹ்வின் அருள்களில் கவனம் செலுத்துதலின் முக்கியத்துவம்

அல்லாஹ்வின் அருள்களில் கவனம் செலுத்துதலின் முக்கியத்துவம்-Allahs Grace-Islam-Jummah Mubarak-Friday Prayer-Allahs Grace-Islam-Jummah Mubarak-Friday Prayer

சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்தஆலா பிரபஞ்சத்தையும் அதிலுள்ள மனிதன் உள்ளிட்ட அத்தனை படைப்புக்களையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்றான். அவனது கட்டளைகளுக்கு ஏற்ப அனைத்து படைப்புகளும் இயங்கியபடி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதாவது மனிதனைத் தவிர்ந்த அனைத்து படைப்புகளும் விரும்பியோ விரும்பாமலோ அவனை வணங்கி கொண்டிருக்கின்றன. இதனை அல் குர்ஆன் மிகத் தௌிவாகக் குறிப்பிட்டிருக்கின்றன.

'வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் (அவை) விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து வழிபட்டே தீரும். காலையிலும் மாலையிலும் அவற்றின் நிழல்களும் (அவனுடைய கட்டளைக்கு வழிபட்டே முன் பின் செல்லுகின்றன)'. (அல் குர்ஆன் 13 - 15)

'ஏழு வானங்களும் பூமியும் இவற்றில் உள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனை துதி செய்து புகழாதிருக்கவில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாவும் மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்' (அல் குர்ஆன் 17 - 44)

இந்த வசனங்களின் படி பிரபஞ்சத்திலுள்ள அனைத்து படைப்புக்களும் இயல்பாகவே அல்லாஹ்வை வணங்கி, துதி செய்து, புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அல்லாஹ்வின் நிர்ணயம், ஏற்பாடு, கட்டளைகளுக்கு ஏற்ப அவை செயற்படுகின்றன.

அந்த வகையில் உலகிலுள்ள படைப்புக்களில் எல்லாம் சிறந்த படைப்பாக விளங்கும் மனிதனும் அல்லாஹ்வை வணங்கி, துதி செய்து புகழ வேண்டியவனாவான். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் ஏனைய படைப்புகளுக்கு போன்ற நிர்ணயம், கட்டளையை அல்லாஹ் மனிதனுக்கு ஏற்படுத்தவில்லை. உலகில் எந்தப்படைப்புக்குமே வழங்காத ஆற்றலையும் திறனையும் அல்லாஹ் அவனுக்கு வழங்கியுள்ளான். அதுவே சிந்திக்கும் ஆற்றலும் பகுத்தறிவு திறனுமாகும்.

இதன் படி அல்லாஹ்வின் எல்லையற்ற பேராற்றலின் கீழ் இயங்கும் இப்பிரபஞ்சத்தில் சிந்திக்கும் ஆற்றலையும் பகுத்தறிவு திறவையும் பெற்றுள்ள மனிதன், தெரிவுச் சுதந்திரம் கிடைக்கப்பெற்றுள்ள சிருஷ்டியாகவும் விளங்குகின்றான். இந்த சுதந்திரத்தின் ஊடாக மனிதன் தன் செயல்களுக்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொள்ளச் செய்யப்பட்டுள்ளான். அதன் விளைவு தான் நன்மையும், தீமையுமாகும். என்றாலும் இந்த சுதந்திர உணர்வு ஒரு பாரிய பொறுப்பு. இதன் ஊடாக மனிதனுக்கு உயர்ந்த அந்தஸ்தும் கண்ணியமும் கிடைக்கப்பெற்றுள்ளது. சுதந்திரமாக சிந்தித்து சுதந்திரமாகத் தெரிவு செய்து வாழ்வை அமைத்துக்கொள்வது பெரும் பாக்கியமாகும்.

ஆனால் இவற்றின் ஊடாக அபாயத்திற்கும், சுதந்திரத்தை உரிய ஒழுங்கில் பயன்படுத்தத் தவறினால் பயங்கர விளைவுகளுக்கும் முகம் கொடுக்கவே நேரும். அதாவது மனிதனுக்கு பெருமையையும், உயர் அந்தஸ்தையும் மாத்திரமல்லாமல் உலகை ஆளக்கூடிய ஆற்றலையும் தகுதியையும் பெற்றுக்கொடுக்ககூடிய இந்த ஆற்றலும் திறனும் உரிய ஒழுங்கில் பயன்படுத்தப்படாத போது அவனுக்கு அழிவையும், இழிவையும், கைசேதத்தையுமே தேடிக்கொடுக்கும்.

அதனால் தான் அல்லாஹ், மனிதன் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம், இலக்கு என்பன குறித்து அவனுக்கு அறிவூட்டி வழிகாட்டவென காலத்திற்கு காலம் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். அதுவும் மனிதர்களிலிருந்தே நல்ல மனிதர்களை இறைத்தூதர்களாகத் தெரிவு செய்து அவர்களுக்கு இறைவழிகாட்டல்களையும் வழங்கினான். அவர்கள் அந்தந்த பிரதேசங்களுக்கும் சமூகங்களுக்கும் உரியவர்களாக அனுப்பிவைக்கப்பட்டார்கள். ஆனால் இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்பு மக்காவில் பிறந்த முஹம்மத் (ஸல்) அவர்களை அவன் உலகிற்கான இறுதித்தூதராக தேர்ந்தெடுத்து, உலகம் இருக்கும் வரையும் பிறக்கும் ஒவ்வொருவருக்குமான மிகத் தௌிவான உலகலாவிய இறைத்தூதையும் அருளினான். அந்த இறைவழிகாட்டல் உலகம் இருக்கும் வரையும் உயிரோட்டத்துடனேயே இருந்து கொண்டிருக்கக்கூடியதாகும். என்றாலும் இந்த இறைவழிகாட்டலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எவரையும் நிர்ப்பந்திக்கவோ கட்டாயப்படுத்தவோ இல்லை. மாறாக அல்லாஹ்வின் இறைத்தூதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் அவரது பணியாக இருந்தது. இது தொடர்பில் அல்லாஹ் அல் குர்ஆனில் தௌிவாகக் குறிப்பிட்டிருக்கின்றான்.

'அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள். (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம்முடைய கட்டளைகளை உங்களுக்கு) தௌிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர் மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்'. அல் குர்ஆன் 05 - 92)

'(இவ்வளவெல்லாம் இருந்தும் நபியே.. ) அவர்கள் (உங்களைப்) புறக்கணித்தால் அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். ஏனென்றால் நம்முடைய தூதை (அவர்களுக்குத்) தௌிவாகச் சேர்ப்பிப்பது தான் உங்கள் மீது கடமை' (அல் குர்ஆன் 16 - 82)

இந்த வசனங்கள் ஊடாக இறைத்தூதரின் பணி, பொறுப்பு தௌிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. அல்லாஹ்வின் இந்தக் கட்டளைகளுக்கு அப்பால் செல்லவே முடியாது. இறைத்தூதை சிலர் ஏற்றுக்கொள்ளாத போது நபி(ஸல்) அவர்கள் கவலைப்பட்ட போதிலும், அன்னாருக்குரிய பொறுப்பை நினைவூட்டி அவருக்கு ஆறுதல் கூறவும் அல்லாஹ் தவறவில்லை.

'இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமே இல்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எவ்வாறென்று) தௌிவாகிவிட்டது.' (அல் குர்ஆன் 02 - 256)

இவ்வாறு அல்லாஹ் தௌிவுபடுத்தி வைத்திருக்கின்றான். அதனால் மனிதரில் எவரும் தன் நேர்வழிகாட்டலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பலவந்தப்படுத்தவோ நிர்ப்பந்திக்கவோ அல்லாஹ் விரும்பவில்லை என்பது தௌிவாகின்றது. அப்படி அவன் விரும்பி இருந்தால் மனிதரில் எவரும் ஈமானில் இருந்து விலகி இருக்க முடியாது. மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றலையும் பகுத்தறிவையும் மாத்திரமல்லாமல் மிகத் தௌிவான இறைவழிகாட்டலையும் அவன் வழங்கி இருக்கின்றான். இந்த ஆற்றலையும் திறனையும் மனிதன் சரியான முறையில் உரிய ஒழுங்கில் பயன்படுத்திக் கொள்வான் என்றால் தனது தெரிவு நேர்வழிகாட்டலா அல்லது வழிகேடா என்பதைத் தீர்மானித்துக் கொள்வான்' என்று 'தத்தபருல் குர்ஆன்' விளக்கவுரையில் அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

அது தான் உண்மை. இப்பிரபஞ்சத்தை எடுத்துக்கொண்டால் அதில் எத்தனையோ கோள்கள் அமைந்திருந்தும் சூரிய குடும்பத்தின் பால் வெளியில் அமைந்துள்ள பூமியில் மாத்திரம் மனிதன் வாழ்வதற்கான வசதியும் ஏற்பாடும் காணப்படுகின்றது. இந்த சூரிய குடும்பத்தில் 08 கோள்கள் அமைந்திருந்தும் எந்தவொரு கோளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாதபடி சீராகவும் ஒழுங்குமுறையாகவும் வலம் வருகின்றது. சூரியலிருந்து எத்தனையோ நச்சு கதிர்வீச்சுக்கள் வௌிப்பட்ட போதிலும் அவை எதுவும் பூமியை வந்தடைவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளோ கனகச்சிதமானவை.

மேலும் ஏனைய கோள்களைப் ​போன்று பூமியும் அமைந்திருந்தால் மனித வாழ்வு சாத்தியமா? பூமி தற்போது அமைவுற்று இருக்கும் இடத்திலிருந்து சூரியனை நோக்கி சொற்ப தூரம் முன்நகர்ந்தால் அல்லது தற்போது இருக்கும் இடத்திலிருந்து சூரியனை விட்டு சற்று தூரே விலகிச் சென்றால் நிலைமை என்னவாகும்? என்பன தொடர்பில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து உலகுக்கு அறிவித்திருக்கின்றாரகள்.

இவை மாத்திரமல்லாமல் மனிதனை எடுத்துப்பார்த்தால் கூட அவனது இயக்கமும் படைப்பொழுங்கும் மாபெரும் அற்புதங்களைக் கொண்டுள்ளன. மனிதன் காற்றில் காணப்படும் ஒட்சிசனுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றான். இந்த ஒட்சிசனை வளிமண்டலத்திற்கு வழங்கக்கூடியவையாக தாவரங்கள் விளங்குகின்றன.

இவ்வாறு அல்லாஹ் எண்ணிறைந்த அருள்களையும் பாக்கியங்களையும் மனிதனுக்கு புரிந்திருக்கின்றான். அவற்றை மனிதன் உரிய கண் கொண்டு நோக்க வேண்டிய பொறுப்புக்குரியவனாவான். அதற்காக தம் சிந்திக்கும் ஆற்றலையும் பகுத்தறிவையும் அவன் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போது அவனை நிர்ப்பந்திக்கவே தேவையில்லை. அவன் சுயமாகவே 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்று அல்லாஹ்வை முழுமனதோடு புகழுவான். அவ்வாறானவர்களின் தெரிவு இறை நேர்வழிகாட்டலாகவே இருக்கும்.

ஆகவே மிகவும் நுணுக்கமான திட்டமிடலுடன் இப்பூமியில் வாழ வழி செய்து தந்திருக்கும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு நபி (ஸல்) அவர்களது வழிகாட்டல்களின் அடிப்படையில் மனிதனின் நன்றி செலுத்துதல் இயல்பானதாக ஏற்ப வேண்டும். அதுவே உணர்வு பூர்வமானதாகவும் அர்த்தபூர்வமாகவும் இருக்கும். அது அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுத்தரும். அவ்வாறான நிலையை அடைந்து கொள்ள ஒவ்வொருவரும் ஆர்வமும் அக்கரையும் காட்ட வேண்டும். அதுவே ஈருலக வாழ்வின் சுபீட்சத்துக்கு அடித்தளமாக அமையும்.

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...