யாழ். மருத்துவ பீடத்தில் மீண்டும் PCR பரிசோதனை | தினகரன்

யாழ். மருத்துவ பீடத்தில் மீண்டும் PCR பரிசோதனை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் PCR பரிசோதனையை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்துவரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்திரம்  PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுவதனால், முடிவுகளை வெளியிடுவதில்  தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் PCR பரிசோதனை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கான கூட்டமொன்று யாழ் . பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று (30) காலை இடம்பெற்றது.

இதன்போதே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 

அத்தோடு PCR பரிசோதனைகளுக்குத் தேவையான மாதிரிகளை மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்வது எனவும், ஆய்வு நடவடிக்களுக்கான நுண்ணுயிரியல் சிறப்பு ஆலோசனைகளை வழங்குவதற்கும், தேவையான உயிரியல் காப்பு முறைகளைக் கண்காணித்து, அறிவுறுத்தல் வழங்குவதற்கும் யாழ். போதனா வைத்தியசாலையின் ஒட்டுண்ணியியல் நிபுணர் வைத்திய கலாநிதி திருமதி ரஜந்தி இராமச்சந்திரன் செயற்படுவார் எனவும், உயிரியல் மற்றும் ஆய்வுகூடக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றும் பணியை யாழ். போதனா வைத்தியசாலை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்கு பாதிப்பேதும் ஏற்படாத வகையில் சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இப்பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ. முருகானந்தன், மு. கலாமதி மற்றும் பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் மட்டுமே இப்பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர். இவர்களுடன் பணியாற்றுவதற்கென நுண்ணுயிரியல் ஆய்வுகூடவியலாளர்களைப் பணிக்கமர்த்துவதற்கு யாழ். பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போதுள்ள PCR பரிசோதனை இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மாதிரிகளே சோதனை செய்யப்பட முடியும். இதனை 180 ஆக அதிகரிப்பதற்காக, ரூபா 50 இலட்சம் பெறுமதியான புதிய PCR பரிசோதனை இயந்திரம் ஒன்றை வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என, துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை முடிவுகள் தினமும் மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

இக்கூட்டத்தில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  எஸ். கேதீஸ்வரன், உதவிப் பணிப்பாளர் மருத்துவர் எஸ். குமாரவேல், யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ், சமுதாய மருத்துவத்துறைத் தலைவரும், பல்கலைக்கழக கொவிட்-19 செயலணியன் இணைப்பாளருமான மருத்துவர் எஸ். சுரேந்திரகுமாரன் மற்றும் நுண்ணுயிரியல், நோயியல் துறை விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

(பருத்தித்துறை விசேட நிருபர் - நிதர்சன் விநோத், ஐங்கரன் சிவசாந்தன்)


Add new comment

Or log in with...