PCR பரிசோதனை இயந்திரம் பழுது; முடிவுகள் தாமத நிலை

சுமார் 20 ஆயிரம் முடிவுகள் தேக்க நிலையில்

பிரதான பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்த நிலையில் அவற்றை திருத்தும் பொருட்டு சீனாவிலிருந்து விசேட நிபுணர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

ராகமையில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வகத்திற்கு சொந்தமான பி.சி.ஆர் இயந்திரம் செயலிழந்துள்ளமையால், சுமார் 20 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சீன நிபுணர்களை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் ராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல் உள்ளிட்ட  கொவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் இராணுவ தளபதி மேலும் விளக்கமளிக்கையில் :-

கடந்த 20 நாட்களாக  24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பாரிய அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட தன் விளைவாகவே இந்த இயந்திரம் பழுதடைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக செயல் இழந்து போயுள்ள இந்த இயந்திரத்தை திருத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை பயனளிக்காத நிலையிலே சீன நிபுணர் அழைத்து வரப்பட உள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இயந்திரம் பழுதடைந்ததன் காரணமாக பரிசோதனைகளின் முடிவுகளை பெற்றுக் கொள்வதில் சிறிய தாமதம் ஏற்பட்டதாகவும் இதனால் உடனுக்குடன் உரிய சில தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அடுத்து இதனால் ஏற்படும் இடைவெளியே நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டதற்கு இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை மேல் மாகாணத்திலிருந்து வேறு மாகாணத்திற்கு தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே தொடர்ச்சியாக மூன்று நாள் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மேல் வாகனத்திற்கு மாத்திரம் அமல்படுத்தப் தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு நீக்கப்படும் என்று தெரிவித்த அவர் ஏற்கனவே கொழும்பு கம்பஹா மற்றும் சில பிரதேசங்களில்  அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை நீக்கப்பட மாட்டாது என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...