நிலையான அபிவிருத்தியே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு

இலங்கையின் இறைமை, ஜனநாயகம், சுதந்திரத்துடன்

சீனாவின் நோக்கம் அதுவல்ல என்கிறார் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ

இலங்கையின் நிலையான அபிவிருத்தியே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு எனவும் சீனாவின் எதிர்பார்ப்பு அதுவல்ல என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பயோ தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அபிவிருத்தி தொடர்பில் முழுமையான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு பிராந்திய ரீதியில் முன்னோக்கி பயணிக்கும் இலங்கையின் இறைமை, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான முன்னேற்றமே இலங்கையின் நட்பு நாடான அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

அமைதி, இறைமை மற்றும் சுதந்திரத்தை மதிக்கும் நாடாக இலங்கையை நோக்குவதாக குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையின் நிலையான அபிவிருத்தியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டின் எதிர்பார்ப்பு சீனாவின் எதிர்பார்ப்பல்ல என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அமெரிக்க ஐக்கிய இராஜ்ஜியம் தயாராகவுள்ளதுடன் அபிவிருத்திக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்றும்தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அமெரிக்கா இலங்கையின் கொள்கைகளுக்கு மதிப்பளித்து செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர், நேற்றைய தினம் வெளிநாட்டமைச்சுடன் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு அவர் நேற்றுமுன்தினம் இரவு இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை வெளிநாட்டமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க தூதுவராலயத்தின் அதிகாரிகளும் வரவேற்றனர்.

நேற்றைய தினம் அவர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதனையடுத்து அவர் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடனும் விசேட பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். அதனையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியுடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தை இரு நாடுகளினதும் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் மூலம் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதுடன் அதற்கான உடன்படிக்கை தயாரிக்கும் நடவடிக்கைகளும்

நிறைவுற்று வருகின்றன. சிறந்த அரச நிர்வாகம், வினைத்திறன் நிலையான கொள்கைக்கிணங்க இங்கு அமெரிக்காவின் முதலீடுகளை முன்னெடுக்க முடியும்.

உலகின் முக்கியத்துவம் வாய்ந்த கடற் பகுதியை திறப்பது தொடர்பில் அதன் அவசியத்தை வெளிநாட்டமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது ஆராயப்பட்டது. வெளிநாட்டமைச்சர் அதற்கான இணக்கத்தை தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இணைந்த பயிற்சி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா வைரஸ் சூழ்நிலையிலும் இலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உடைகள், பாதுகாப்பு உடைத் தொகுதிகள் தமது நாட்டுக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் இலங்கைக்கு ஆறு மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கமுடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவானது இலங்கையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தியுள்ளது. ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் நாடு என்ற வகையில் இலங்கை மீது சமமான பார்வையுள்ளதாகவும் இலங்கையும் அமெரிக்காவும் ஜனநாயகத்தை மதிக்கும் நாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தை முடித்துக்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் நேற்று பிற்பகல் மாலைதீவை நோக்கிப் பயணமானார். நேற்றைய இந்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளிநாட்டமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே, முன்னாள் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, அமெரிக்க தூதுவர் எலைனா பி டெப்ளிஸ் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...