புலிபாய்ந்தகல்லில் 10 ஆமைகளுடன் இருவர் கைது | தினகரன்

புலிபாய்ந்தகல்லில் 10 ஆமைகளுடன் இருவர் கைது

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் 10 ஆமைகளைக் கொண்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு,  குறித்த ஆமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக,
வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

இக்கைது நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்போது, புலிபாய்ந்தகல் பொலிஸ் காவல் அரண் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் ஆமைகளைக் கொண்டு வந்த வாழைச்சேனை விநாயகபுரத்தைச்  சேர்ந்த இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இச்சந்தேக நபர்களை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வாழைச்சேனை மாவட்ட நீதவான் எச்.எம்.எம்.பஷீல் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது,  தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விசேட குழுவொன்று செயற்பட்டு வருவதாகவும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

(கல்குடா தினகரன் நிருபர் - எஸ்.எம்.எம்.முர்ஷித்)


Add new comment

Or log in with...