சிறுவர்கள், வயோதிபர்கள் வீதியில் நடமாட வேண்டாம்! | தினகரன்

சிறுவர்கள், வயோதிபர்கள் வீதியில் நடமாட வேண்டாம்!

பொத்துவில் பிரதேசம் எங்கும் கடுமையான கட்டுப்பாடுகள்

கொரோனாவின் மூன்றாவது அலை தாக்கத்தில் கிழக்கு மாகாணத்தில் மிகக் கூடுதலான பாதிப்பைச் சந்தித்துள்ள பிரதேசங்களாக வாழைச்சேனை மற்றும் பொத்துவில் ஆகியன உள்ளன. கிழக்கில் நேற்று வரை 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வாழைச்சேனையில் 27பேருக்கும், பொத்துவிலில் 5பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்கள் கரடியனாறு கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை அவர்களது குடும்பத்தினர் அந்தந்த பிரதேசங்களில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மீன் சந்தைகள், பொதுச் சந்தைகள், மரக்கறிச் சந்தைகள் என்பன மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியில் மூவினங்களும் வாழும் பிரதேசம் பொத்துவில் ஆகும். இலங்கையில் உல்லாசப் பயணிகளை சுண்டிஇழுக்கும் உல்லாசபுரியான அறுகம்பை உல்லை கடற் பிரதேசமும் அங்கேதான் உள்ளது.எனவே உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் ஒன்றுகூடுகின்ற கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த மையம் அது. எனவே தொற்று என்று வந்து விட்டால் அது எப்படி எந்த வேகத்தில் பரவும் என்பதை சாதாரணமாக ஊகிக்க முடியும்.

இந்த நிலையில் அங்கு இதுவரை ஐந்து பேர் தொற்றுக்கிலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே இதனை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்ற சிந்தனையில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உடனடியாகச் செயற்பட்டார்.

கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து பொத்துவில் பிரதேச கொரோனா தடுப்பு வழிநடத்தல் குழுவை அவசர அவசரமாக பொத்துவில் பிரதேச செயலாளர் இராசரெத்தினம் திரவியராஜ் கூட்டினார்.

பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேசசபைத் தவிசாளர், பாதுகாப்புத் துறையினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அங்கு பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக சுயதனிமைப்படுத்தலுக்குள்ளானவர்கள் தங்கியுள்ள வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் அவர்களின் தகவல்களைப் பெற்று தேவையான உணவு வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவையில்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. அநாவசியமாக சிறுவர்கள், வயோதிபர்கள் வீதிகளில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். ஓட்டோவில் இருவர் மாத்திரமே பயணிக்க வேண்டும். ஒன்றுகூடல், திருமண நிகழ்வுகளைத் தவிர்த்தல் வேண்டும். கொரோனா தடுப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் பொதுச்சுகாதார பணியாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பாதுகாப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தேவையாள ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.

மரணவீடுகளில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட வேண்டும். விளையாட்டு நிகழ்ச்சிகளை, விழாக்களைத் தவிர்த்தல் அவசியம். வெளியூரிலிருந்து வருவோர் மற்றும் வியாபாரத்திற்கு வருவோரின் விபரம் பதியப்பட்ட பின்னரே அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

கரைவலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களின் தகவல்களை பதிவு செய்தல், கருத்தரங்கு கூட்டம் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுவெளிகளில் முகக்கவசம் அணியாமல் விடுவதும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதேவேளை பொதுவான சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். தவிர்த்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

_வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...