பூண்டுலோயா தோட்டமொன்றில் ஒருவர் அடையாளம்

- பேலியகொடை மீன் சந்தையில் தொழில்புரிபவர்
- 10 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

கொத்மலை பிரதேச சபை நிர்வாக பிரிவுக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கொத்மலை பிரதேச சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

45 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து அங்கு பத்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு, அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் விபரமும் திரட்டப்பட்டு வருகின்றன.

பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரியும் இவர், கடந்த கடந்த வாரம் வீடு திரும்பியுள்ளார். இவர் சில இடங்களுக்கு சென்று வந்தும் உள்ளார்.

பேலியகொடை கொத்தணி பரவலையடுத்து இவரிடம் PCR பரிசோதனைக்கான மாதிரிகளை பெறுவதற்கான நடவடிக்கையை சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்டிருந்தனர். அதன்படி பரிசோதனை முடிவு நேற்று (27)  மாலை வெளியானது. அதில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் பூண்டுலோயா நகரம் முழுவதும் இன்று (28)  தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

பிரதேச சபைத் தலைவர் சுசந்த ஜெயசிங்க மற்றும் பூண்டுலோயா வட்டார பிரதேச சபை உறுப்பினர் இராமையா பாரதிதாஸன் ஆலோசனையின் பிரகாரம் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - ஜி.கே. கிருஷாந்தன், தலவாக்கலை குறூப் நிருபர் - பி. கேதீஸ்)

 


Add new comment

Or log in with...