பற் தூரிகைகள், வெற்று பேனா குழாய்கள் மீள் சுழற்சி | தினகரன்

பற் தூரிகைகள், வெற்று பேனா குழாய்கள் மீள் சுழற்சி

பாவனையின் பின் ஒதுக்கப்படும் வெற்றுக் காபன் பேனா குழாய்கள் மற்றும் பற் தூரிகைகள் மீள்சுழற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்ட முதலாவது கொள்கலன் நேற்று முன்தினம் (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித்திட்டம் "நாம் வளம் பெற்று நாட்டை வளப்படுத்துவோம்" என பெயரிடப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு பாடசலைகளில் இருந்து ஒதுக்கப்படும் காபன் பேனா குழாய்கள் சுமார் 80 கிலோ கிராமாகும்.  இவை வருடமொன்றுக்கு 29,000 கிலோ கிராமுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து ஒதுக்கப்படும் அளவு இதுவரையில் கணக்கிடப்படவில்லை.

பாவனையின் பின்னர் ஒதுக்கப்படும் பேனா மற்றும் பற் தூரிகைகள் உக்குவதற்கு  100 முதல் 500 வருடங்கள் செல்வதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட கொள்கலன்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. "வெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிளாஸ்டிக்" நிறுவனம் இவற்றை கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தை அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவதை கட்டாயமாக்குவதற்காக அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...