2019 A/L பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

கடந்த 2019  இடம்பெற்ற உயர் தரப்பரீட்சைகளின்  பெறுபேறுகளுக்கமைவாக, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது (26) இணையத்தில் (admission.ugc.ac.lk) வெளியாகியுள்ளன.

இப்பரீட்சைகள் 2019 ஓகஸ்ட் 05ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நாடு முழுவதிலுமுள்ள 315 இணைப்பு மத்திய நிலையங்களின் ஊடாக 2,278 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றன.

இதில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் (337,704)  இப்பரீட்சைக்காக விண்ணப்பித்திருந்தனர்.

அதில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைய, 187,167 பேரும் பழைய பாடத்திட்டத்திற்கமைய 94,619 பேரும் தோற்றியிருந்தனர்.

பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 113,637 பேர் பழைய பாடத்திட்டத்திற்கு அமையவும், 67,489 பேர் புதிய பாடத்திற்கு அமையவும் என, இம்முறை 181,126 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத்  தகுதி பெற்றுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.

இம்முறை, வைத்திய, பொறியியல் உள்ளிட்ட பீடங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற வழக்கு, கொரோனா வைரஸ் பரவல், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை ஆகியன, 2019 பரீட்சைகளின் வெட்டுப்புள்ளிகள் (Z-Score) வெளியிடுவதற்கு காலதாமதம் ஏற்பட்டமைக்கு காரணம் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

இதேவேளை, 2019 பரீட்சைக்குத் தோற்றிய 71 (புதிய பாடத்திட்டம் 42; பழைய பாடத்திட்டம் 29) பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வு விண்ணப்பம் 2019 ஜனவரி 17 வரை கோரப்பட்டிருந்ததோடு, இதில் 61,248 பேர் விண்ணப்பித்த நிலையில், அதன் பெறுபேறுகள் இவ்வருடம் ஓகஸ்ட் 08ஆம் திகதி இணையத்தில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...