நிந்தவூர் பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி!

நிந்தவூர் பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி!-False COVID19 Positive to the Patient Identified In Nintavur

தொற்று அகலவில்லை அவதானமாக இருக்க வேண்டுகோள்

நிந்தவூர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவரின் சகோதரிக்கு PCR பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என வெளியாகியிருந்த செய்திகளில், தற்போது அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாகக் கூறப்பட்ட பெண்மணியின் சகோதரரான 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பு மாலைதீவிலிருந்து வருகை தந்ததுடன் அவர், 2 வாரங்கள் வெலிகந்த வைத்தியசாலயில் தனிமைப்படுத்தப்பட்டு, அதன்பிறகு பின்னர் மீண்டும் இரண்டு வாரங்கள் தன்னுடைய வீட்டிலும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருந்தார்.

இவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்ற நேரத்தில் இவருக்கும், இவரது இரண்டு சகோதரிகளுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் இவருடைய சகோதரி ஒருவருக்கு PCR பரிசோதனையின் போது  கொரோனாவிற்கான அறிகுறிகள் (False Positive) காணப்பட்டதாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர், நேற்று முன்தினம் (24) தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (25) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணனிடம் இது தொடர்பில் கேட்டபோது,

நிந்தவூர் பிரதேசத்தில் கொரோனா தொற்றென சந்தேகிக்கப்பட்ட நபரின் ஆரம்ப பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்றுறிதியாக காணப்பட்டது. இது ஆரம்பத்தில் (False Positive) வாக அடையாளம் காணப்பட்டதுடன், தற்போது அந்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் அது நெகட்டிவாக கிடைத்திருப்பதாகவும், குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இருந்த போதும் இந்த தொற்று இன்னும் எம்மை விட்டு அகலவில்லை என்பதனால், மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதுடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன்,  முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினைப்  பின்பற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுள்ளார்.

(நிந்தவூர் குறூப் நிருபர் - சுலைமான் றாபி)


Add new comment

Or log in with...