கற்பிட்டியில் 7 பேருக்கு கொரோனா தொற்று | தினகரன்

கற்பிட்டியில் 7 பேருக்கு கொரோனா தொற்று

கற்பிட்டியில் 7 பேருக்கு கொரோனா தொற்று-11 COVID19 Patients Identified in Kalpitiya-Puttalam

PCR சோதனைக்கு வந்து மரணமடைந்தவருக்கு தொற்று இல்லை

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேசத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது PCR பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கடமைநேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

பேலியகொடை மீன் சந்தைக்குச் சென்றுவந்த கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த மீன் விற்பனையாளர்கள், மீன்லொறி சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட 40 பேர், நேற்றுமுன்தினம் (24) பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைவரும், சுகாதார பரிசோதகர்களின் விஷேட மேற்பார்வையில் தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்திய 40 நபர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மண்டலகுடா மற்றும் குறிஞ்சிப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா இருவரும், வாழைத்தோட்டம் (வன்னிமுந்தல்) , மாம்புரி, வெந்தேசிவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் தொடர்பை பேணி வந்துள்ளனர் என கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எம். இன்பாஸ் தெரிவித்தார்.

இதேவேளை, கற்பிட்டியில் 07 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிரதேச பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயும் விஷேட கூட்டமொன்று இன்று (26) திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எம். இன்பாஸ் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சனிக்கிழமை பீ.சி.ஆர். பரிசோதனைக்கு வருகை தந்த கற்பிட்டி கண்டக்குழியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

எனினும் உயிரிழந்த குறித்த இளைஞருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என என உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர் - றஸ்மின்)


Add new comment

Or log in with...