கம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடரும்; நீக்க தீர்மானம் எடுக்கப்படவில்லை

பொருட்கள் கொள்வனவுக்காக மக்களுக்கு சந்தர்ப்பம்

கம்பஹா மாவட்டத்தில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று நீக்கப்படும் என வெளிவரும் தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது என இராணுவப் பேச்சாளர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் மூன்று தினங்களுக்கு மேல் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள பிரதேசங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த இராணுவத்தளபதி;

கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இன்று 26ம் திகதி நீக்குவதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. அம் மாவட்டத்தில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.

எனினும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் நேற்றுக் காலை கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 165 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதேவேளை தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்ட கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் இதுவரை 924 பேர் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதற்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 140 வாகனங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை நேற்றுமுதல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள பொலிஸ் நிர்வாகப் பிரதேசங்களில் விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...