சீரடி சாயிபாபா | தினகரன்

சீரடி சாயிபாபா

’’எந்த ஜீவனாக இருந்தாலும் வீட்டு வாசலில் உணவிடுங்கள். அது எனக்கு நீங்கள் தருகிற உணவு. உங்கள் வீட்டுக்கு அதிதியாக வருகிறேன்’’ என்கிறார் பகவான்.

அன்னமயம் பிராணமயம் ஜகத் என்பார்கள். பகவான் சாயிபாபாவின் ஷீர்டியில் வருவோருக்கெல்லாம் உணவு பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கும். ஷீர்டியில் பாபா இருக்கும் போதிருந்து, தொடங்கப்பட்ட அன்னதானம், பக்தர்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வருகிறது. சாயிபாபா கோயில்களிலும் பாபா பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.

நம் வீட்டிலும் கூட பாபாவுக்கு வைத்து நைவேத்தியம் செய்யப்படும் உணவானது, பாபா பிரசாதமாக சத்தான உணவாக மாறிவிடும் என்கிறார்கள் சாயி பக்தர்கள். அதுமட்டுமா?

பாபா உணவு குறித்தும் அன்னதானம் குறித்தும் அருளியதை அறிந்துகொள்ளுங்கள்.

’’உணவு சமயத்தில் பசியோடு எந்த ஜீவன் வருகிறதோ, அதற்கு அவசியம் உணவிடுங்கள். மனிதனாக இருக்கலாம். பறவையாக இருக்கலாம். மிருகமோ புழுவோ பூச்சியோ கூட இருக்கலாம். உணவு நேரத்தின் போது, வரும் எந்த உயிராக இருந்தாலும் அவை உங்கள் வீட்டின் அதிதி. விருந்தாளி. விருந்தோம்பல் என்பது உயரிய பண்பு. தானம் என்பது மிகச்சிறந்த புண்ணியம். அன்னதானம் என்பது சந்ததியைக் கடந்தும் வருகிற புண்ணியம். எல்லா உயிர்களும் உணவை நாடுகின்றன. எல்லா உயிர்களுக்கும் பசிக்கும். உணவு நேரத்தில், எந்த ஜீவராசி உங்கள் கண்களுக்கு தென்படுகிறதோ அதுவே அதிதி. அதுவே விருந்தாளி.

காகத்துக்கு உணவிடும் சமயத்தில் காகத்துக்கு வழங்குகிற அளவை விட இன்னும் கூடுதலாக எடுத்துக் கொள்ளுங்கள். வழக்கமாக காகத்துக்கு உணவிடும் இடத்தில் காகத்துக்கு உணவிடுங்கள். இன்னும் அதிக அளவிலான உணவை வீட்டு வாசலில் வைத்துவிடுங்கள். எந்த ஜீவராசியையும் கூவி அழைக்காதீர்கள்.நீங்கள் வைத்த உணவைச் சாப்பிடுவதற்காக எந்தப் பிராணி வேண்டுமானாலும் சாப்பிட வரலாம். உணவைச் சாப்பிடுவது எந்தப் பிராணியாக இருந்தாலும் வருந்தாதீர்கள். உயிரில் பேதமில்லை. எந்த உயிரினம் சாப்பிட்டாலும் லட்சம் விருந்தினர்களுக்கு உணவளித்த புண்ணியத்தை நீங்கள் பெறுகிறீர்கள். பசியால் வாடும் எந்த உயிருக்கு உணவிட்டாலும் உண்மையில் அந்த உணவை, எனக்கு இடுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்’’ என்கிறார் சாயிபாபா. ஆகவே, காகத்துக்கு தினமும் உணவிடும் அதேவேளையில், வீட்டு வாசலில், ஏதேனும் உயிரினத்துக்காகவும் உணவிடுங்கள். பாபா இன்னும் இன்னுமாக உங்கள் வீட்டுக்குள் சுபிட்சத்தை உண்டுபண்ணுவார்.


Add new comment

Or log in with...