பேலியகொடை தொடர்பாளர்கள் 56 பேருக்கு மன்னாரில் PCR | தினகரன்

பேலியகொடை தொடர்பாளர்கள் 56 பேருக்கு மன்னாரில் PCR

- ஒக்டோபர் 01 முதல் 939 PCR பரிசோதனைகள்

பேலியகொடை மீன் சந்தை தொகுதியில் கடந்த 21ஆம் திகதி கொரோனா தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 56 பேருக்கு நேற்று முன்தினம் (22) PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் டி. வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (2)  காலை இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவர்களின் PCR பரிசோதனையின் மாதிரிகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு  பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கைகளை எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

மேலும், வவுனியா மாவட்டத்தில் வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற முடிவுகளை தொடர்ந்து, மன்னார் மாவட்டத்திலும் வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு குறிப்பாக, வவுனியா - மன்னார் எல்லை பகுதியான கல்மடு பகுதியில் வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு  நேற்று (23) PCR பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது. சுமார் 54 பேருக்கு PCR இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களது மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களின் முடிவுகளையும் எதிர்பார்த்துள்ளோம்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 07ஆம் திகதி முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட 1ஆம், 2ஆம் நிலை தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகள் அனைத்தும் 'கொரேனா தொற்று இல்லை' என்ற முடிவை தந்தமையினால், தனிமைப்படுத்தப்பட்டவர்களில் அவரோடு தங்கியிருந்து வேலை செய்தவர்களை தவிர ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வேலைத்தளத்தில் இருந்தவர்களுக்கான PCR பரிசோதனைகள் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெற்று அவர்களுக்கும் சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெற்றால் அவர்களும் விடுவிக்கப்படுவார்கள்.

பட்டித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அப்பகுதியில் 9 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி இருந்தனர்.இவர்களில் ஒருவர் குணமடைந்து இரணவல வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்ப இருக்கின்றார்.

கடந்த முதலாம் திகதி முதல் இன்று வரை மன்னார் மாவட்டத்தில் 939 சமூக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகின்ற PCR பரிசோதனைகளுக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டவை.

கொரோனா தொற்று என தனிமைப்படுத்தப்பட்டவர்களில் முதலாவது கொரோனா தொற்று உள்ளவர் என அடையாளம் காணப்பட்டவர் மற்றும் கட்டட வேலை இடம்பெற்ற பகுதியில் இருந்த சிலரும் அதனை விட வெளிமாவட்டங்களில் இருந்து வந்து  தொற்று உள்ளவர்களுடன் இருக்கக்கூடும் என்று சந்தேகிப்படும் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(மன்னார் குறூப்  நிருபர் - எஸ்.றொசேரியன் லெம்பேட்)


Add new comment

Or log in with...