இந்தோனேசியாவில் நிலச்சரிவால் சுரங்கத் தொழிலாளர் 11 பேர் பலி

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பருவமழை காரணமாக இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர் சங்கிலியாக உள்ள 17,000 தீவுகளின் மலைத்தொடர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இதனிடையே மலைச்சரிவுகளிலும், ஆற்றுப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே சுமத்ரா மாகாணத்திலுள்ள தஞ்சுங் லலாங் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த புதன்கிழமை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனையடுத்து உள்ளுர் மக்கள் உடனடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர். நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.


Add new comment

Or log in with...