மானை வேட்டையாடியவர் மடக்கிப்பிடிப்பு; மானின் உடலும் மீட்பு

வவுனியா, புளியங்குளம் காட்டுப்பகுதியில் இறைச்சிக்காக மானை வேட்டையாடியவரை,  வவுனியா மாவட்டச் செயலக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.

வவுனியா, வடக்குப் புளியங்குளம் காட்டுப்பகுதியில் மான், பன்றி போன்ற விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வவுனியா மாவட்டச் செயலக வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புளியங்குளம் பொலிஸாரின் உதவியுடன் புளியங்குளம் காட்டுப்பகுதிக்கு நேற்று (22) மாலை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சென்றிருந்தனர்.

இதன்போது, குறித்த காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் நிற்பதை அவதானித்த அதிகாரிகள் காட்டுப்பகுதியில் மேலும் ஊடுருவிச் சென்றனர். அச்சமயத்தில் இறைச்சிக்கு மான் ஒன்றினை வேட்டையாடியவரை பொலிஸார் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட உயிரிழந்த மான், மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபரை, வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை புளியங்குளம் பொலிஸாருடன் இணைந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே.வசந்தரூபன்)


Add new comment

Or log in with...