ஹட்டன் பிரதேசத்தில் 3,000 குடிசை வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள்

திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மஹிந்த பணிப்பு

‘சுபீட்சத்தின் நோக்கு’ வேலைத்திட்டத்தின் கீழ் இந்நாட்டின் பிரதான நகரங்களுக்கிடையிலான சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கமைய நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடும் வகையிலான கூட்டம் (21) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பின்போது நுவரெலியா பிரதேசம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் சுற்றுலா நகரங்களாக மாற்றுவது தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்தினார்.

நுவரெலியா பிரதேசத்தை அண்மித்த உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கிரகரி குளம் மற்றும் குதிரைப் பந்தய மைதானம் ஆகியவற்றை அண்மித்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.

அதன்படி நுவரெலியா நகரத்தை உச்ச அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்லல், குதிரைப் பந்தயத்தை மீண்டும் ஆரம்பித்து நகரை அண்மித்துள்ள பூங்காக்களின் தரத்தை உயர்த்துதல், நுவரெலியா நகரில் விளையாட்டுத்துறை சார்ந்த வசதிகளை மேம்படுத்துதல், கேபல்கார் திட்டம் மற்றும் கேளிக்கை பூங்காவிற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து சுற்றுலா வசதிகளை உச்சஅளவில் அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர், சம்பந்தப்பட்டதுறையினருக்கு அறிவுறுத்தினார்.

நுவரெலியா நகரை அண்மித்த வீதி அபிவிருத்தித் திட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிக்கைக்கிணங்க ஹட்டன் நகரிலுள்ள 3,000க்கும் அதிகமான குடிசை வீடுகளை அகற்றி, குடிசை வீடுகளில் வசித்தவர்களுக்கு புதிய வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஹட்டன் நகர அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஹட்டனிலிருந்து தலவாக்கலை, ஸ்ரீபாத வரையான பிரதேசத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கும் பிரதமர் அறிவுறுத்தினார்.

 


Add new comment

Or log in with...