கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக 13 மாவட்டங்களில் கொரோனா பரவல்

மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர

கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக 13 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இடம் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

பேலியகொடை பொது மீன் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையிலேயே மேலும் பல மாவட்டங்களுக்கு அது பரவ காரணமாகி யுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகளவு வைரஸ் தொற்று நோயாளிகள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்ட அவர், எனினும் அதற்கு மேலதிகமாக குருநாகல், புத்தளம், கேகாலை, கண்டி,காலி,அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், பதுளை, பொலநறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் புதிதாக வைரஸ் தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மீன்களின் உடலில் கொரோனா வைரஸ் தொற்று எந்தளவு காலம் உயிருடன் வாழும் என்பது தொடர்பில் உறுதியாக எதுவும் கூற முடியாது என்றும்மீன்களை உணவுக்காக எடுத்துக் கொள்வதில் எந்த பிரச்சினையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் மீன் விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து இந்த வைரஸ் இனம் காணப்பட்டது என குறிப்பிட்ட அவர் மீன்களில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்குமானால் மனிதர்களிடத்தில் எவ்வாறு அதுபரவியது என்பது தொடர்பில் கண்டறிய வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதுவரை நாடளாவிய ரீதியில் நான்கு இலட்சத்து 25,000 இற்கும் அதிகமான பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், நேற்று முன்தினம் மாத்திரம் 8000 பிசி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பேலியகொட பொது மீன் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் பதிவானதையடுத்து நேற்றுக்காலை மீன் சந்தை முற்றாக முடக்கப்பட்டது. மீன் கொள்வனவிற்காக வருகை தந்திருந்தவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப் படுத்தலுக்காக உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம் 

 


Add new comment

Or log in with...