நாசா விண்கலம் குறுங்கோளில் இருந்து பாறை துகள் சேகரிப்பு | தினகரன்

நாசா விண்கலம் குறுங்கோளில் இருந்து பாறை துகள் சேகரிப்பு

நான்கு ஆண்டு பயணத்திற்குப் பின்னர் நாசாவின் ஒஸ்ரிஸ்–ரெக்ஸ் விண்கலம் பென்னு என்ற குறுங்கோளில் இருந்து அதன் பாறை துகள்களை சேகரித்துள்ளது. அதற்காக தனது 11 அடி நீளமுள்ள இயந்திரக் கையால், பென்னுவின் நிலப்பரப்பை 5 விநாடிகள் அந்த விண்கலம் தொட்டது.

பூமியில் இருந்து 330 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பென்னுவை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஒஸ்ரிஸ்–ரெக்ஸ் விண்கலத்தை அனுப்பியது. 2016ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த விண்கலம் 2018ஆம் ஆண்டு பென்னு குறுங்கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து சீராக பயணம் மேற்கொண்டது.

அதன்பின்னர் படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

அதன்படி ஒஸ்ரிஸ்–ரெக்ஸ் விண்கலத்தில் உள்ள இயந்திரக் கரங்கள் குறுங்கோளை துளையிட்டு பாறைத் துகள்களை எடுத்துள்ளது.

அதன்படி ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலத்தில் உள்ள இயந்திரக் கரங்கள் குறுங்கோளில் தரையிறங்கும் நிகழ்வு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட சுமார் 18.5 நிமிடங்கள் முன்னதாகவே நிகழ்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். திட்டமிடப்பட்ட அளவு துகள்களை விண்கலம் சேகரித்துள்ளதா என்பது வரும் சனிக்கிழமையே தெரியவரும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது. பென்னுவில் இருந்து குறைந்தபட்சம் 60 கிராம் அளவிற்கு பாறைத் துகள்களை ஆய்வுக்கு எடுத்து வர விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் விண்கலம் 2 கிலோ கிராம் வரை பாறைத் துகள்களை எடுக்கும் திறன் கொண்டது என்பதால் கூடுதல் மாதிரிகள் வர வாய்ப்பு உள்ளது.

பென்னு குறுங்கோளில் தனது பணிகளை முடித்துக்கொண்டு ஒஸ்ரிஸ்–ரெக்ஸ் விண்கலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அங்கிருந்து புறப்பட்டு, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் ஏவப்பட்ட ஹயாபுசா–2 விண்கலம், மற்றொரு குறுங்கோளான லியுகுவில் இருந்து கடந்த ஆண்டு பாறைத் துகள்களை எடுத்தது. அந்த விண்கலம் தற்போது பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

இந்த பாறை துகள்களை வைத்து நடத்தப்படும் ஆய்வு சூரிய குடும்பம் எப்படித் தோன்றியது என்ற புதிரை விடுவிக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் சூரியன் தோன்றியபோது ஏற்பட்ட கழிவுகளே குறுங்கோள்களாக உருமாற்றம் பெற்றன என கூறப்படுகிறது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியை பலமுறை மோதிய இந்த குறுங்கோள்கள், நீரையும், உயிர்வாழ்வுக்கான உயிரியல் அம்சங்களையும் கொண்டு வந்திருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.


Add new comment

Or log in with...