கூட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானில் 15 பேர் பலி | தினகரன்

கூட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானில் 15 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் துணைத் தூதரகத்திற்கு அருகில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

துணைத் தூதரகத்தில் இருந்து வீசாவை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் ஜலாலாபாத் நகரில் உள்ள மைதானம் ஒன்றில் திரண்டிருந்தபோதே இந்த நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

நகரஹார் மாகாண தலைநகரான ஜலாலாபாத்தின் மைதானத்தில் இருந்து பலரும் வெளியேற முயன்றபோதே இந்த நெரிசல் ஏற்பட்டதாக மாகாண மருத்துவமனை பேச்சாளர் சஹர் அடெல் தெரிவித்துள்ளார்.

இதன்போது 11 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்திருப்பதாகவும் முதியவர்கள் பலர் காயமடைந்திருப்பதாகவும் மாகாண சபை உறுப்பினர் சஹ்ராப் காதரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பயணிக்கும் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான அட்டையை பெறுவதற்கு 3,000க்கும் அதிகமான ஆப்கானியர்கள் ஒன்றிணைந்ததாக மாகாண அதிகாரிகள் இருவர் தெரிவித்தனர்.

உறவினர்களை பார்ப்பதற்கு, மருத்துவ சிகிச்சைக்கு, தொழில் வாய்ப்பை தேடி அல்லது நாட்டில் இடம்பெறும் வன்முறைகளில் இருந்து தப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆப்கானியர்கள் பலர் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளும் கிட்டத்தட்ட 2,600 கிலோமீற்றர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.

போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் வன்முறை, மத துன்புறுத்தல் மற்றும் வறுமையை விட்டு வெளியேறிய சுமார் 30 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் மற்றும் பொருளாதார குடியேறியவர்களை பாகிஸ்தான் கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...