நீர்ப்பாசனம் தடைப்பட்டதால் வாகனேரி விவசாயிகள் பாதிப்பு | தினகரன்

நீர்ப்பாசனம் தடைப்பட்டதால் வாகனேரி விவசாயிகள் பாதிப்பு

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அதிகாரிகள் சிலரின் செயற்பாட்டால் விவசாயிகள் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயம் மேற்கொள்வதில் பாரிய சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

வாகனேரி பிரதேசத்திலுள்ள தவணை கண்டம், கக்கரிமடு கண்டம், மக்கிளான கண்டம், பருத்திச்சேனை கண்டம், கொடித்தீவு கண்டம், தரிசேன கண்டம், வட்ட கண்டம் ஆகிய கண்டங்களில் பதினையாயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் இம்முறை பெரும்போக விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான தவணைக் கண்டத்திலுள்ள அணைக்கட்டு பழுதடைந்துள்ள நிலையில் புதிய அணைக்கட்டை நிர்மாணிக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிலையில் பெரும்போக விவசாய செய்கைக்கு முன்னர் இப்பணி பூர்த்தி செய்யப்பட்டு விவசாயிகளின் பாவனைக்கு வழங்கப்படுமென உறுதி வழங்கப்பட்டது.

ஆனால் பெரும்போக விவசாயச் செய்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 10ம் திகதி விவசாயச் செய்கைக்கு நீர் வழங்குவதாக விவசாய கூட்டத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தினால் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை விவசாயத்திற்கு நீர் வழங்கப்பட்டவில்லை.

பெரும்போக விவசாய செய்கைக்கு முன்னர் அணைக்கட்டு பணிகளை பூர்த்தி செய்து தருவதாக கூறப்பட்ட நிலையில் இதுவரை அப்பணி பூர்த்தி செய்யப்படவில்லை. நீர் செல்வதற்கான வழிகள் மண்ணால் மூடப்பட்டு காணப்படுவதால் விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் வழி தடைப்பட்டு காணப்படுகின்றது.

விவசாய செய்கைக்கு தண்ணீர் இல்லையென நீர்ப்பாசன திணைக்களத்தினருக்கு விவசாயிகளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து விவசாயி ஒருவரின் வயலின் ஊடாக சிறு வாய்க்கால் வெட்டப்பட்டு நீர் குறைவாக வழங்கப்பட்டது.ஆனால் வாய்க்கால் சேதமடைந்ததன் காரணமாக நீர் செல்வது தடைப்பட்டுள்ளது.

அதன் பின்னர் விவசாயிகள் வாய்க்கால் சேதமடைந்ததன் காரணமாக ஏற்பட்ட தடையை நீக்கும் வகையில் தடையை அகற்றிய பொழுதும் இதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் பதினையாயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய செய்கைக்கு போதுமானதாக இல்லையென விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக நீர்ப்பாசன திணைக்களத்தினர் குறித்த அணைக்கட்டு திருத்தப் பணியை மிக விரைவாக பூர்த்தி செய்து விவசாயிகளின் பாவனைக்கு நீரை வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

எஸ்.எம்.எம்.முர்ஷித்...?
(கல்குடா நிருபர்-)


Add new comment

Or log in with...