20ஆவது திருத்தம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

- ஆதரவு: 156 பேர்; எதிர்ப்பு: 65பேர்
- எதிரணி எம்.பிகள் 08 பேர் ஆதரவு

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்  மூன்றில் இரண்டு (3/2) பெரும்பான்மை வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் (2ஆம் வாசிப்பிலும், 3ஆம் வாசிப்பிலும்) வழங்கப்பட்டன.

ஆளும்கட்சி பொதுஜன பெரமுனவுடன் அதன் ஆதரவு கட்சிகளான ஈபிடிபி, தேசிய காங்கிரஸ், சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

எதிரணியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் உட்பட 8  பேர் ஆதரவாக வாக்களித்தார்கள்.

20ஆவது திருத்தத்திற்கு எதிராக ஜக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பு என்பன வாக்களித்திருந்தன.

வாக்கெடுப்பின் போது  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, கடந்த இருதினங்களாக காலை 10.00 மணி முதல் இரவு 7.30 மணிவரை இடம்பெற்ற 20 ஆவது திருத்த சட்டமூலம் மீதான விவாதம், நீதி அமைச்சர் அலி சப்ரி ஆரம்பித்து வைத்தார்.

எதிரணி சார்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எம்.பி விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றினார்.

இரவு 7.30 மணிக்கு விவாதம் நிறைவடைந்த நிலையில் குழுநிலையில் திருத்தங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன. 

இதன்போது ஆளும் தரப்பு சார்பில் சுமார் 50 திருத்தங்களும் எதிரணி சார்பில் சுமார் 57 திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன.

இதற்கமைய, தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழுத்தலைவர் அநுர குமார திஸாநாயக்க இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை கோரியிருந்தார்.

அதற்கமைய 2/3 பெரும்பான்மை வாக்குகளால் 20ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

(பாராளுமன்றத்திலிருந்து ஷம்ஸ் பாஹிம், நிசாந்தன் சுப்ரமணியம்)


Add new comment

Or log in with...