மக்களின் ஆணைக்கு இணங்கவே 20ஆவது திருத்தச் சட்டம் சமர்ப்பிப்பு | தினகரன்

மக்களின் ஆணைக்கு இணங்கவே 20ஆவது திருத்தச் சட்டம் சமர்ப்பிப்பு

எதிரணியும் ஆதரவு வழங்க வேண்டும் என்கிறார் பிரதமர்

மக்களின் ஆணைக்கிணங்கவே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றுத் தெரிவித்தார். எனவே, இதற்கு எதிரணியினரும் ஆதரவை வழங்க வேண்டுமென பாராளுமன்றத்தில் நேற்று (21) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “இன்று எமக்கு மிகவும் முக்கியமான ஒரு தினமாகவே நாம் கருதுகிறோம். 20ஆவது திருத்தச் சட்டமூலம் என்பது மக்களின் ஆணைக்கிணங்கவே கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், அது நீண்டகாலத் தீர்வாக என்றுமே அமையாது. அதற்கிணங்க நாம் விரைவில் புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிப்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். நாம் 20ஐ, ஜனநாயக ரீதியாகத்தான் கொண்டுவந்துள்ளோம். எனினும், 19 ஆவது திருத்தச்சட்டமூலம் அவ்வாறு கொண்டுவரப்படவில்லை.

இதற்கு எதிராக கருத்துக்களை வெளியிட வாய்ப்பளிக்கவில்லை. இதனால் நாடு பலவீனமடைந்தது. 19 இன் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. இதனால் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே தெரிந்துவைத்திருந்தார்களென ஆணைக்குழுவில் சாட்சி வழங்கப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும், இதனை தடுத்துக்கொள்ள முடியாதமைக்கு 19 தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனையிட்டு நாம் வெட்கமடையவேண்டும்.

நாட்டின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லாமல் இருப்பது, நாட்டுக்கு நல்லதல்ல.மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு பொலிஸ் மாஅதிபரை மாற்றக்கூட அதிகாரம் இல்லை.

இவ்வாறான ஜனாதிபதி முறைமைதான் இன்றும் நாட்டில் இருக்கிறது. நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்திருந்தேன். அந்த அதிகாரம் இருந்த காரணத்தினால்தான் யுத்தத்தை எம்மால் நிறைவுக்குக் கொண்டுவர முடியுமாக இருந்தது.

 


Add new comment

Or log in with...