மக்களின் பாதுகாப்பு கருதி அரசாங்கத்தின் ஏற்பாடு | தினகரன்

மக்களின் பாதுகாப்பு கருதி அரசாங்கத்தின் ஏற்பாடு

தற்போதைய சூழலில் நாட்டில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகின்றவர்கள் நாளுக்குநாள் பதிவாகும் நிலை நீடிக்கிறது. இதனை கடந்த இரண்டொரு வாரங்களாக அவதானிக்க முடிகின்றது. இப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும், தவிர்த்துக் கொள்வதற்கான அறிவுரைகளும், வழிகாட்டல்களும் பரந்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நேற்று 21.10.2020 இரவு 10 மணி முதல் எதிர்வரும் 26.10.2020 திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரை ஐந்து நாட்களுக்கு கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் திவுலப்பிட்டிய பெண் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பது ஒக்டோபர் மாத ஆரம்ப பகுதியில் உறுதியானது. அதனைத் தொடர்ந்து மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, வெயாங்கொடை ஆகிய மூன்று பொலிஸ் பிரிவுகளிலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு மறுஅறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது.

இருப்பினும் இம்மாவட்டத்திலுள்ள வேறு சில பொலிஸ் பிரதேசங்களிலும் இத்தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அந்தந்தப் பொலிஸ் பிரிவுகளிலும் இந்த ஊரடங்கு அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் நேற்று மாலை வரையும் கம்பஹா மாவட்டத்திலுள்ள 19 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. அவ்வாறான சூழலில்தான் நேற்று இரவு முதல் முழு மாவட்டத்திற்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே 19 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு அமுலில் இருந்தும் கூட முழு மாவட்டத்திற்கும் இந்த ஊரடங்கை விஸ்தரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஏனெனில் மக்கள் கொவிட் 19 தவிர்ப்புக்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஒழுங்குமுறையாகப் பின்பற்றாததே காரணம் என்பதை மறந்து விடலாகாது. அதேநேரம் கம்பஹா மாவட்டத்திற்கு வெளியே குருநாகல் மாவட்டத்தின் ஐந்து பொலிஸ் பிரிவுகளிலும் நேற்றுமுன்தினம் முதல் இவ்வகை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

பொதுவாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதன் நோக்கமும் எதிர்பார்ப்பும் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதேயாகும். கொவிட் 19 தொற்றானது வேகமாகப் பரவக் கூடியது. தற்போதைய சூழலில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது தவிர்த்துக் கொள்வற்கோ இற்றை வரையும் மருந்துகளோ தடுப்பு மருந்துகளோ புழக்கத்திற்கு வரவில்லை.

இவ்வாறான நிலையில் இவ்வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் தவிர்ப்பதற்கும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகழுவுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார வசதிகளைப் பேணுதலே பெரிதும் உதவும். இதுவே உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கருத்தாகும்.

இந்நிலையில் இலங்கையின் சுகாதாரத் துறையினர் அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குகின்றனர். அத்தோடு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் வீட்டுக்கு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளவும், வீட்டுக்கு திரும்பும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கைகழுவுமாறும், சமூக இடைவெளியைப் பேணுமாறும், இவற்றில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுமாறும் வலியுறுத்துகின்றனர். இவற்றை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினரும் முன்னெடுக்கின்றனர்.

இருந்தும் கூட இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களிலும் பதிவாகவே செய்கின்றனர். இத்தொற்றைத் தவிர்த்துக் கொள்வதற்காக வழங்கப்படும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் மக்கள் ஒழுங்கு முறையாகக் கடைப்பிடிப்பார்களாயின் இந்நிலைமை ஏற்பட்டிராது.

எனவேதான் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி கொவிட் 19 பரவலை தவிர்ப்பதற்காகவே கம்பஹா மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் இத்தொற்றின் தன்மையை சரியான முறையில் புரிந்து கொண்டவர்களாக செயற்பட வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது.

இவ்வைரஸ் தொற்று தோற்றம் பெற்றது முதல் 10 மாத காலப் பகுதிக்குள் 04 கோடிக்கும் மேற்பட்ட மக்களைப் பாதித்துள்ளதோடு 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்களையும் காவு கொண்டுள்ளது. ஆகவே சுகாதார அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் ஒழுங்குமுறையாகக் கடைப்பிடித்து இவ்வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். இதன் நிமித்தம் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கும் வேலைத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அதன் மூலம் கொவிட் 19 தொற்று பரவலை ஏற்கனவே கட்டுப்படுத்தியது போன்று இப்போதும் விரைவாக கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.


Add new comment

Or log in with...