A/L பரீட்சை மத்திய நிலையங்களுக்கு ரூ. 15,000 நிதியுதவி

A/L பரீட்சை மத்திய நிலையங்களுக்கு ரூ. 15,000 நிதியுதவி-Rs 15000 Allocated for GCE AL Examination Centre

- இன்று கணக்கில் வைப்பீடு செய்ய கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உத்தரவு
- சுகாதார பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு அழைக்க 1988

நாடு முழுவதும் தற்போது இடம்பெற்று வரும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் பரீட்சை நிலையங்களுக்கு தலா ரூபா 15,000 வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை இடம்பெறும் உயர் தரப் பரீட்சைகள், 2,648 மத்திய நிலையங்களில் இடம்பெற்று வருகின்றது.

அதற்கமைய, கொவிட்-19 தொற்றை எதிர்கொநோக்கியுள்ள நிலையில், மாணவர்களை அதிலிருந்து பாதுகாப்பதற்காக, பரீட்சை மத்திய நிலையங்களின் சுகாதார வசதிகளை உறுதி செய்யும் பொருட்டு, குறித்த மேலதிக நிதி ஒவ்வொரு பரீட்சை மத்தியநிலையங்களுக்கும் ஒதுக்கப்படுவதாக, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் இடம்பெறும் இப்பரீட்சைகளில், மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அறிவிக்க 1988 எனும் உடனடி தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு, கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், எந்தவொரு வகையிலாவது ஏதேனுமொரு பரீட்சை மத்தியநிலையத்தில், மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத வகையில், பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ளுதல் அல்லது சுகாதார வசதிகள் கிடைக்காதிருத்தல் உள்ளிட்ட விடயங்கள் காணப்படுமாயின், உடனடியாக கல்வியமைச்சின் உடனடித் தொலைபேசி இலக்கமான 1988 இற்கு அழைத்து தெரிவிக்குமாறு, கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 06ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 362,824 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...