கடைசி பந்தில் சிக்சர் அடித்து பெங்களூர் அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி | தினகரன்

கடைசி பந்தில் சிக்சர் அடித்து பெங்களூர் அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி

பெங்களூர் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து திரில் வெற்றியை பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து திரில் வெற்றியை பெற்றது. லோகேஷ் ராகுல், கெய்ல் அரைசதம் விளாசினர்.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஓப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில் சார்ஜாவில் நேற்றுமுன்தினம் அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் முதல்முறையாக அதிரடிவீரர் கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டார்.

நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூர் தலைவர் விராட் கோலி தயக்கமின்றி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி தேவ்தத் படிக்கல்லும், ஆரோன் பிஞ்சும் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர். ஆச்சரியமூட்டும் விதமாக பஞ்சாப் தலைவர் லோகேஷ் ராகுல் முதல் ஓவரில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் மேக்ஸ்வெல்லை பயன்படுத்தினார். அந்த ஓவரில் பிஞ்ச், ஒரு சிக்சர் அடித்தார். பிஞ்ச் - படிக்கல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 38 ஓட்டங்கள் திரட்டி உடைந்தது. தேவ்தத் படிக்கல் (18 ஓட்டங்கள்), அர்ஷ்தீப்சிங் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து தலைவர் விராட் கோலி வந்தார். ‘பவர்- பிளே’யான முதல் 6 ஓவர்களில் பெங்களூர் அணி ஒரு விக்கெட்டுக்கு 57 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு ஆரோன் பிஞ்ச் (20 ஓட்டங்கள்) முருகன் அஸ்வின் சுழலில் கிளீன் போல்ட் ஆனார்.

3-வது விக்கெட்டுக்கு வழக்கத்துக்கு மாறாக வாஷிங்டன் சுந்தர் களம் அனுப்பப்பட்டார். 13 ஓட்டங்கள் எடுத்த அவர் பந்தை சிக்சருக்கு விரட்ட முயற்சித்து ஆட்டம் இழந்தார். இதையடுத்து சகலதுறைவீரர் ஷிவம் துபே அடியெடுத்து வைத்தார்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய தலைவர் விராட் கோலியாலும் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினார். இதனால் ஓட்ட வேகம் கொஞ்சம் குறைந்தது. இந்த சூழலில் 14-வது ஓவரில் ரவி பிஷ்னோயின் பந்து வீச்சில் தொடர்ந்து 2 சிக்சர்களை பறக்க விட்ட ஷிவம் துபே 23 ஓட்டங்களில் (19 பந்து) பெவிலியன் திரும்பினார்.

இதன் பின்னர் சூறாவளி துடுப்பாட்ட வீரர் டிவில்லியர்ஸ் இறங்கினார். தாமதமாக வந்தாலும் சிறிய மைதானத்தில் வாணவேடிக்கை நிகழ்த்தப்போகிறார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் 2 ஓட்டங்களில் (5 பந்து) ஷமியின் பந்து வீச்சில் பிடி ஆனார். அதே ஓவரில் தலைவர் விராட் கோலியும் (48 ஓட்டங்கள், 39 பந்து, 3 பவுண்டரி) வீழ்ந்தார். இதனால் ஓட்ட விகிதம் மேலும் சரிந்தது.

பெங்களூர் அணிக்கு அதிர்ஷ்டவசமாக சகலதுறை வீரர் கிறிஸ் மோரிஸ் கைகொடுத்தார். 19-வது ஓவரில் ஒரு சிக்சர் விளாசிய அவர் முகமது ஷமியின் கடைசி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டினார். உதனாவும் இறுதி ஓவரில் ஒரு சிக்சர் அடிக்க அணி 170 ஓட்டங்களை தாண்டியது. 20 ஓவர்களில் பெங்களூர் அணி 6 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் சேர்த்தது. மோரிஸ் 25 ஓட்டங்களுடனும், உதனா 10ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி, முருகன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து 172 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களம் புகுந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வாலும், தலைவர் லோகேஷ் ராகுலும் கலக்கலாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 78 ஓட்டங்கள் எடுத்து அட்டகாசமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். மயங்க் அகர்வால் 45 ஓட்டங்களில் (25 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) போல்ட் ஆனார். இதைத் தொடர்ந்து கிறிஸ் கெய்ல் இறங்கினார். இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் முதல்முறையாக களம் கண்ட கெய்ல் ஓரிரு ஓவர்களை சமாளித்த பிறகு தனது கைவரிசையை காட்டினார். வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் 2 சிக்சர்களை கிளப்பினார். இன்னொரு பக்கம் லோகேஷ் ராகுலும் ஏதுவான பந்துகளை தெறிக்க விட்டார். இதனால் பஞ்சாப் அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. கெய்ல் 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 2 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது. இறுதி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வீசினார். எளிதில் வெற்றி பெற்று விடும் என்ற நினைத்த வேளையில் பஞ்சாப் வீரர்கள் இந்த அளவுக்கு பரபரப்பாக்குவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல் 2 பந்துகளை வீணடித்த கெய்ல் 3-வது பந்தில் ஒரு ஓட்டம் எடுத்தார். 4-வது பந்தில் ஓட்டம் எடுக்காத லோகேஷ் ராகுல் 5-வது பந்தில் ஒரு ஓட்டத்துக்கு முயற்சித்த போது கெய்ல் (53 ஓட்டங்கள், 45 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். இதனால் பதற்றம் தொற்றியது.

கடைசி பந்தில் பஞ்சாப்புக்கு ஒரு ஓட்டம் தேவையாக இருந்தது. ஓட்டம் கொடுக்காமல் மடக்கினால் ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு நகர்த்தலாம் என்ற எண்ணத்துடன் பெங்களூர் தலைவர் கோலி களத்தடுப்பாளர்களை நெருக்கமாக நிறுத்தினார். ஆனால் புல்டாசாக வந்த கடைசி பந்தை சந்தித்த நிகோலஸ் பூரன் சிக்சருக்கு தூக்கியடித்து வெற்றிக்கனியை பறித்தார்.

பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 177 ஓட்டங்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. லோகேஷ் ராகுல் 61 ஓட்டங்களுடன் (49 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

6 தோல்விகளால் துவண்டு போய் இருந்த பஞ்சாப் அணி ஒரு வழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது. இது பஞ்சாப் அணியின் 2-வது வெற்றியாகும். முதலாவது வெற்றியும் இதே பெங்களூருக்கு எதிராகத்தான் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 8-வது லீக்கில் ஆடிய பெங்களூர் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.


Add new comment

Or log in with...