வவுனியாவில் இரட்டைக் கொலை; ஒருவர் கவலைக்கிடம் | தினகரன்


வவுனியாவில் இரட்டைக் கொலை; ஒருவர் கவலைக்கிடம்

வவுனியாவில் இரட்டைக் கொலை; ஒருவர் கவலைக்கிடம்-2 Person Killed at Omanthai-One More Injured-Suspect Arrested

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

இன்று (17) காலை 6.45 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார், தலையில் பாரிய வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் அம்புலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் இரட்டைக் கொலை; ஒருவர் கவலைக்கிடம்-2 Person Killed at Omanthai-One More Injured-Suspect Arrested

குறித்த கொலைச் சம்பவம் நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவரான கோபால் குகதாசன் (42) எனும் 4 பிள்ளைகளின் தந்தை மற்றும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு மகேந்திரன் வயது 34 ஆகிய இருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

சம்பவத்தில் சுப்பிரமணியம் சிவாகரன் என்ற நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் மாணிக்கர் வளவில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் ஓமந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கும், மரணமடைந்தவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தரக்கம் கொலையில் முடிந்துள்ளதாக விசாரணைகளிலிரந்து தெரிய வந்துள்ளதோடு, ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ஓமந்தை விஷேட நிருபர் - பாலநாதன் சதீஷ், வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)


Add new comment

Or log in with...