குடிநீருக்காக அல்லலுறும் ரிதிதென்ன மக்களுக்கு அல்-நூர் பவுண்டேசன் வழங்கும் பாரிய உதவி | தினகரன்

குடிநீருக்காக அல்லலுறும் ரிதிதென்ன மக்களுக்கு அல்-நூர் பவுண்டேசன் வழங்கும் பாரிய உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் தற்போது வரட்சியின் காரணமாக பாரிய குடிநீர் பற்றாக்குறை நிலவுகின்றது. குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான அல்-நூர் பவுண்டேசன் குடிநீர் வழங்கும் வேலைத் திட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றது.

இதன் முதற் கட்டமாக கல்குடா தொகுதியிலுள்ள பின்தங்கிய மீள்குடியேற்றக் கிராமமான ரிதிதென்ன கிராமத்தில் 50000 லீற்றர் கொள்ளளவு கொண்ட நீர்த் தாங்கி அமைத்து அப்பகுதி மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வேலைத் திட்டமானது பிரதேசசபை உறுப்பினர் முஹமட் தாஹிர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும், பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்தும் அல்-நூர் பவுண்டேசனால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ரிதிதென்ன கிராமத்தில் ரிதிதென்ன அல்-இக்ரஹ் மகாவித்தியாலய மாணவர்களும் பாரிய குடிநீர்ப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அண்மையில் பாடசாலை அதிபர் நாகூர் சஹாப்தீன் பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் தாஹிரிடம் எடுத்துக் கூறியிருந்தார்.

இப்பிரதேசத்திலுள்ள முன்பள்ளி மாணவர்களின் வரவு குடிநீர் பிரச்சினை காரணமாக மந்தமான நிலையில் உள்ளதாகவும், சேனைப்பயிர்ச் செய்கையாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து வருவதாகவும் கால்நடை வளர்ப்பு கேள்விக்குறியாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் பிரதேச சபை உறுப்பினர் ஊடாகவும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கள் ஊடாகவும் அல்-நூர் பவுண்டேசனுக்கு தெரியப்படுத்தியதை அடுத்தே இந்த குடிநீர் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மகாவலி எச் வலய பிரதேசத்தில் குறித்த ரிதிதென்ன பிரதேசம் அமையப் பெற்றிருந்தாலும் கிறவல் பாறைகள் அமைந்த மேட்டு நிலப்பகுதிக்குள் இப்பகுதிகள் அமையப் பெற்றிருப்பதால் வருடந்தோறும் குடிநீர் பிரச்சினையை இப்பகுதி மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சர்வதேச தொண்டு நிறுவனங்களால் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு பலதடவை நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அவை எதிர்பார்த்த பலனளிக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இக்கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக அண்மையில் ஊர்ப்பிரமுகர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

யு.எல்.எம்.ஹரீஸ்...?

(வாழைச்சேனை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...