கடலரிப்பால் காவு கொள்ளப்படும் மாளிகைக்காடு கரையோர பிரதேசம்

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கடற்கரைப் பிரதேசம் அண்மைக் காலமாக பாரிய கடலரிப்பை எதிர்கொண்டுள்ளது. இதனால் மாளிகைக்காடு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்படும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை மாளிகைக்காடு கடற்கரைப் பிரதேசத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்த சுமார் 50 மீற்றர் நிலப் பகுதியை கடல் காவு கொண்டுள்ளது. அப்பகுதியிலிருந்த தென்னைமரங்கள், வாடிகள், கிணறுகள் என பல கடலுக்குள் சென்றுள்ளன.

தற்போது தொடர்ந்தும் கடலரிப்பு இடம்பெற்று வருவதால் மீனவர்களின் வாடிகள், கிணறுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படும் அபாயம் நிலவுவதோடு, மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக மீனவர் சங்கப் பிரதிநிதி ஏ.பி.ஏ.ஜப்பார் தெரிவித்தார்.

மாளிகைக்காடு கடற்கரையில் சுமார் 20 மீன்வாடிகள் உள்ளன. 100 ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகுகள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாக 4000 பேர் ஈடுபட்டுள்ளனர். மறைமுகமாக மீன்வியாபாரிகள், தரகர்கள், மீன்வெட்டுபவர்கள், கடைக்காரர் என சுமார் 10 ஆயிரம் பேர் இத்தொழிலை நம்பியிருக்கின்றனர்.

கடலில் பிடிபடும் மீன்களை மொத்தமாக கடற்கரையில் வைத்து விலை கூறி விற்பது வழக்கம். தற்போது அப்பிரதேசம் கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால் மீன்களை மிகவும் குறுகிய பரப்பிற்குள் விற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. மேலும் படகுகளை, தோணிகளை கரையில் இழுத்து கரைசேர்ப்பதும் நிறுத்தி வைப்பதும் ஆபத்தாக உள்ளதாக ஜப்பார் மேலும் தெரிவித்தார்.

மாளிகைக்காடு கடற்கரைப் பிரதேசத்தில் கடற்றொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட சுமார் 10ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர் சங்கப் பிரதிநிதி ஜப்பார் மேலும் தெரிவிக்கிறார்.

"ஒலுவில் துறைமுகத்தில் மண்மேடு மூடியதால் 2 வருடங்களாக அங்கு எமது இயந்திரப் படகுகளை உள்கொண்டு செல்ல முடியாதுள்ளது. அதைத் தோண்டி வகை செய்தால் ஓரளவாவது படகுகளைக் காப்பாற்ற முடியும்" என்றார் அவர். கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் திணைக்களம் எமது அவல நிலையை வந்து பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை அருகிலுள்ள அந்நூர் ஜூம்மா பள்ளிவாசலின் மயானத்தின் (ஜனாசா மையவாடி) சுற்றுமதில் கடலரிப்பால் இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் அங்கு புதைக்கப்பட்டிருந்த பிரேதங்களின் பகுதிகள்(ஜனாசாக்கள்) வெளியில் தள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தடுத்து நிறுத்தி கல்வேலி அல்லது மண்மூடைகள் அடுக்கப்பட வேண்டும் என பள்ளிவாசல் நிருவாகத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வி.ரி.சகாதேவராஜா...?
(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...