புதிய தனிமைப்படுத்தல் சட்டங்கள்; மீறுவோறுக்கு ரூ. 10,000; 6 மாத சிறை

புதிய தனிமைப்படுத்தல் சட்டங்கள்; மீறுவோறுக்கு ரூ. 10,000; 6 மாத சிறை-New Health Guidelines-Extraordinary Gazette

புதிய தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில், பொது இடங்களில் சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல் போன்ற முக்கிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை சட்டமாக அறிவிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் சுகாதார அமைச்சர் இன்று (15) கையெழுத்திட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டிலுள்ள பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பது பொறுப்பு என அரசாங்கம் கருதுவதால், சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஒரு சில வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததற்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

இந்த புதிய வர்த்தமானி அறிவிப்பின் மூலம், அதனை மீறுவோருக்கு ரூ. 10,000 இற்கு குறையாத அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை அல்லது இரு தண்டனைகளும் நீதிமன்றங்களால் விதிக்க முடியும்.

அத்துடன், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சேவை நிலையங்களுக்குள் நுழைதல் மற்றும் நிறுவனத்தை நடாத்திச் செல்லுதல் தொடர்பில் இவ்வர்த்தமானி அறிவிப்பில் இவ்வழிகாட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

  • சேவை நிலையங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் நுழையும் அனைவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • இரண்டு நபர்களுக்கு இடையில் ஒரு மீற்றருக்கு குறையாத சமூக இடைவெளியை பேணுதல்.
  • சேவை நிலையங்களுக்குள் நுழைவதற்கு முன்பு ஒவ்வொரு நபரின் உடல் வெப்பநிலையையும் அளவிடுதல்.
  • கிருமிநாசினி திரவத்துடன் போதியளவிலான கை கழுவுதல் வசதிகளை வழங்குதல்.
  • குறித்த சேவை நிலையங்களுக்குள் நுழைவோரின் பெயர், அடையாள அட்டை இலக்கம், தொடர்பு இலக்கம் அடங்கிய ஆவணத்தை பராமரித்தல்.
  • சேவை வழங்கும் நிலையங்களில் உச்சபட்ச ஊழியர்களின் எண்ணிக்கையையும் ஏனையயோரின் எண்ணிக்கையும் விஞ்சாது பேணுதல்.

அத்துடன், பயணத் தடைகள், தனிமைப்படுத்தல், போக்குவரத்து நடவடிக்கைகள் போன்ற விசேட விடயங்கள் தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இவ்வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படுவதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

PDF File: 

Add new comment

Or log in with...