சுமுகமாக ஆரம்பமாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை

-சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் பங்குபற்றல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கும் சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உயர்தர பரீட்சைக்கு மாணவர்கள் நேற்று (12) தோற்றினார்கள்.

நேற்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமான உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை நாடளாவிய ரீதியில் 362 874 மாணவர்கள் 2648 பரீட்சை நிலையங்களில் தோற்றியுள்ளனர். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் மிகவும் உட்சாகமாக பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்திருந்தனர். உயர்தர பரீட்சை நடைபெறும் சகல பாடசாலைகளிலும் சுகாதார அறிவுரைகளுக்கமைவாக நேற்று முன் தினம் (11) திகதி தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் தோற்றுவற்கான சுகாதார ஏற்பாடுகளை சுகாதார அறிவுறுத்தல்கனுக்கு அமைவாக பரீட்சைத்திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைவாக கைகழுவுதல், மாணவர்களுக்கிடையே இடை வெளி பேணுதல், முகக்கவசம் அணிதல் உட்பட சுகாதார பழக்க வழக்கங்கள் பின்பற்றப்பட்டிருந்தன.

குறித்த சுகாதார நெறிமுறைகளை பின் பற்றுகிறார்களா என்பது தொடர்பாக ஆராயவதற்காக பொது சுகாதார பரிசோதகர்களும் பரீட்சை நிலையங்களுக்கு சென்று பார்வையிட்டனர்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் தற்சமயம் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றியவாறு பரீட்சைகள் இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள பிரதேசங்களில் 12 விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 454 பரீட்சார்த்திகள் அந்த நிலையங்களில் பரீட்சைக்காக தோற்றுகின்றனர்.

அந்தவகையில்ஹற்றன் கல்வி வலயத்தில் 26 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளடன் இதில் 3161 மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளனர். தமிழ் மொழி மூலம் 1392 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 800 மாணவர்களும், தனியார் பரீட்சாத்திகள் 969 பேரும் பரீட்சை எழுத அனுமதியை பெற்றுள்ளனர்.

இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டத்திலும், 43 ஆயிரத்து 339 பேர் பழைய பாட திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். புதிய பாடத்திட்டத்தில் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை மூல பரீட்சாத்திகளாவர். எஞ்சிய 41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர். உயர்தர பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலையக பகுதிகளில் நேற்று காலையும் ஆங்காங்கே மழை பெய்தது, கடும் குளிரும் நிலவியது. எனினும், மாணவர்கள் உற்சாகத்துடன் பரீட்சை நிலையங்களை நோக்கி சென்றதை காணமுடிந்தது.

கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, மொனறாகலை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள மாணவர்கள் நேரங்காலத்தோடு பரீட்சை நிலையங்களுக்கு சென்றதுடன் சுகாதார வழிகாட்டல்களையும் முழுமையாக பின்பற்றிருந்தனர்.

எனினும், ஒரு சில மாணவர்கள் முகக்கவசம் அணியாமல் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்திருந்தனர்.அவ்வாறானவர்களுக்கு பாடசாலை அதிபர்களால் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு, முகக்கவசம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முகக்கவசம் அணியாமல் பரீட்சை நிலையங்களுக்கு வரக்கூடாது எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

கடும் மழை மற்றும் கடும் காற்றுக்கு மத்தியில் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளித்திருந்ததோடு சில பிரதேசங்கள் கொரோனா காரணமாக முடக்கப்பட்டுள்ள நிலையிலும் பரீட்சைகள் சமூகமாக இடம்பெற்றதாக அறிய வருகிறது.

ஹற்றன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...