நாடு முழுவதும் புதுப் பொலிவுடன் தினகரன்

Click here to play the video

வடக்கின் உதயத்துடன் ஆரம்பம்

தினகரன் பத்திரிகை இன்று (02) முதல் புதுப் பொலிவுடன் தனது பயணத்தை மீள ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் இன்று (02) யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்த தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் பீடம் உள்ளிட்ட, லேக் ஹவுஸ் நிறுவனம் தனது பயணத்தை மக்களுடன் இணைந்து பயணிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட மற்றும் நாடளாவிய பல்வேறு அனுசரணையாளர்களுடன் இணைந்து ஒரே நாளில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.

குறிப்பாக நல்லூர் கோவிலில் வழிபாடுகளுடன் ஆரம்பமான தினகரன் வடக்கின் உதயம், அதனைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கைலாசபதி அரங்கில் பிரதான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கலந்து கொண்டார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ், மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், அமைச்சின் செயலாளர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் யாழ், பல்கலைக்கழக ஊடகத் துறை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அது மாத்திரமன்றி லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிறுவர்களுக்கான வெளியீடான 'குட்டிச் சுட்டி' பத்திரிகையின் மீள் வெளியீடும் இதன்போது இடம்பெற்றது.

முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் அவர்களது கல்வியை முன்னெடுத்துச் செல்வதை ஆரம்பமாகக் கொண்ட சிறுதொகை பணத்துடனான கார்கில்ஸ் வங்கி வைப்பீட்டு கணக்கொன்றும் ஆரம்பித்து கொடுக்கப்பட்டது.

நகரின் முக்கிய இடங்களில் நடமாடும் இசை வாகனத்தில் இசை நிகழ்வுகள் உள்ளிட்ட விடயங்களும் இடம்பெற்றது.

மகாத்மா காந்தி பிறந்ததினமான இன்று, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளில் 92 பக்கங்களைக் கொண்ட பத்திரிகை இலவசமாக வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...