போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க விமானப் படையினர் தீவிர நடவடிக்ைக

பொலிசாருடனும், கடற்படையினருடனும் இணைந்து செயற்படுகிறோம் - விமானப் படை தளபதி பேட்டி

பரந்த அளவில் இதுவரை தெரிந்திராத இலங்கை விமானப் படையின் செயற்பாடுகள் பற்றி விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் எமக்கு அண்மையில் வழங்கிய பேட்டியின் போது கூறியிருந்தார்.

கேள்வி: விமானப் படையில் சேர வேண்டுமென்று எப்போது தீர்மானித்தீர்கள்?

பதில்: நான் லலித் அத்துலத் முதலி கல்லூரியில் படித்தேன். அங்கு 5 ஆம் வகுப்பு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், கொழும்பு நாலந்தா கல்லூரியில் சேர்ந்தேன். விளையாட்டு, கல்வி என்ற இரண்டிலும் அக்கறை செலுத்தினேன். எனது பெற்றோரின் வழிகாட்டலில் நான் மாணவ கடெட் அணியில் 1977 இல் சேர்ந்தேன். அங்குதான் நான் படையினரைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன். 1982 இல் நான் பாடசாலையை விட்டு விலகிய போது கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட கெடெட் அணியில் பிரதிநிதித்துவம் வகித்திருந்தேன். இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளுக்கும் நான் விண்ணப்பம் அனுப்பியிருந்தேன். இறுதியில் விமானப் படையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் விமானப் படையில் சேர்ந்தேன்.

கேள்வி: விமானப் படையில் சேர்ந்த பின்னர் ஆரம்பம் முதல் உச்சம் வரையிலான பயணம் எப்படியிருந்தது?

பதில்: எந்தவொரு படையிலும் செய்யும் பயணம் இலகுவானதாக இருக்காது. அதில் பல ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். ஆனால் எனது பயணம் ஓரளவு இலகுவானதாகவே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஹெலிகொப்டர் மற்றும் நிலையான இறக்கை கொண்ட போக்குவரத்து விமானி என்ற வகையில் நான் பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளேன். ஆனால் எனது பயணம் சௌகரியமாகவே அமைந்தது. ஆனால் எனது மகன் பிறந்த போது இரண்டு நாட்களுக்குப் பின்னரே அவனை என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் படையில் இருப்பவருக்கு இது ஒன்றும் புதிய விடயமல்ல.

கேள்வி: யுத்த காலத்தில் இடம்பெற்ற மறக்க முடியாத சம்பவம் எதுவும் உள்ளதா?

பதில்: ஆம் ஒருசில சம்பவங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைச் சொல்கிறேன். 1992 இல் முகாம் ஒன்றில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு மீள்விநியோகப் பொருட்ளை நான் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அடிப்படை விநியோகப் பொருட்களையும் மருந்து வகைகளையும் கொண்டு செல்ல இரண்டு ஹெலிகொப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. அச்சமயம் முகாம் முற்றுகையிடப்பட்டது. இரண்டு ஹெலிகொப்டர்களில் ஒன்று அநுராதபுரத்திலும் மற்றையது கட்டுநாயக்காவில் இருந்தும் செல்லவிருந்தன. கட்டுநாயக்கவில் இருந்து சென்ற ஹெலிகொப்டருக்கு நான் பொறுப்பாக இருந்தேன். திட்டப்படி நாம் கொழும்பு சென்று விநியோகப் பொருட்களை இறக்கி விட்டு காயமுற்றவர்களை ஏற்றி வர வேண்டியிருந்தது. அநுராதபுரத்தில் இருந்து ஹெலிகொப்டரை ஓட்டி வந்தவருக்கு அந்நிலப் பகுதி பரிச்சயமாக இருந்ததால் அவரை முதலில் தரையிறங்குமாறு கூறப்பட்டது. அவர் அங்கு சென்று திரும்பும் போது வானில் அவருடன் தொடர்பு கொள்ள முடிந்தது.

முகாமின் நிலை பற்றி அவரிடம் கேட்ட போது தீவரவாதிகள் துப்பாக்கிகளுடன் அங்கு சுற்றிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். ஆனால் அவரது ஹெலிகொப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும் அவர் தெய்வாதீனமாக தப்பி விட்டதாக கூறினார். ஆகவே நான் தொடர்ந்து பயணித்தேன். ஆனால் இறக்கவிருந்த போது எனது ஹெலிகொப்டர் மீதும் தாக்குதல் நடந்தது. இருந்தும் என்னால் பாதுகாப்பாக அநுராதபுரத்துக்கு திரும்ப முடிந்தது. இந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியாது.

கேள்வி: நாட்டில் மாபெரும் போதைவஸ்து ஒழிப்பு செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த செயற்பாட்டில் விமானப் படை எவ்வாறு பங்குபற்றும் என்பதை விளக்க முடியுமா?

பதில்:போதைவஸ்து ஒழிப்புக்கு பல வழிமுறைகள் உள்ளன. போதைவஸ்து பாவனையாளர்கள் ஊடாக போதைவஸ்து கடத்தல்காரர்களை கண்டுபிடிப்பது நாம் பின்பற்றும் ஒருமுறையாகும். அத்துடன் காட்டுப் பகுதிகளில் சந்தேகத்துக்குரிய இடங்கள் தெளிவாகத் தெரியும். அந்த இடங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஆனால் கீழே தரையில் இருந்து பார்த்தால் அந்த இடங்களை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது.

கேள்வி: நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் போதை ஒழிப்பு செயற்பாடுகளுக்கு புறம்பாக, தளபதி என்ற ரீதியில் விமானப்படையினரிடையே போதைப்பழக்கத்துக்கு எந்த இடமும் அளிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறீர்களே?

பதில்:ஆம், விமானப் படையினரிடையே எந்த வகையிலும் போதைப் பாவனை இடம்பெறக் கூடாது என்பது தொடர்பாக அனைத்து விமானப் படையினரையும் ஒன்று திரட்டி மூன்று நாள் சந்திப்பு ஒன்றை நாம் அண்மையில் நடத்தினோம். அத்துடன் எந்த வகையிலும் சட்டவிரோத போதைவஸ்து பாவனையில் ஈடுபடப் போவதில்லையென்று அவர்களிடம் எழுத்துமூல உத்தரவாதத்தையும் பெற்றுக் கொண்டோம். எனவே இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று விமானப் படையில் உள்ள எவரும் கூற முடியாது.

கேள்வி: யுத்த காலத்தில் வெடிபொருட்களைக் கண்டுபிடிப்பதில் விமானப்படையின் நாய்கள் பிரிவு பெரும் பங்களிப்பை வழங்கியது. அதேபோன்று விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் போதைவஸ்துக்களை கண்டுபிடிக்க விமானப்படையின் நாய்கள் பிரிவை பயன்படுத்துவீர்களா?

பதில்:முக்கியமான பெரும் புள்ளிகள் பங்குபற்றும் நிகழ்ச்சிகளில் காவல் கடமைகளில் ஈடுபட நாம் மோப்ப நாய்களை பயன்படுத்தியுள்ளோம். புதிதாக நாம் இறக்குமதி செய்துள்ள நாய்கள் தற்போது பொலிஸ் பிரிவினரால் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இவை போதைவஸ்துகளை கண்டுபிடிப்பதற்கு பழக்கப்படுகின்றன. அவை விமான நிலையங்களில் போதைவஸ்துகளை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும். அவ்வாறான எட்டு முதல் 10 மோப்ப நாய்கள் இப்போது எம்மிடம் உள்ளன. விமான நிலையங்களின் பாதுகாப்புக்கு இப்போது விமானப்படையினரே பொறுப்பாக உள்ளனர். எனவே இந்த மோப்ப நாய்ப் பிரிவு சட்டவிரோத போதைவஸ்து கடத்தலை கண்டு பிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

கேள்வி: யுத்த காலத்தில் வான்வெளி பாதுகாப்பு வழங்கிய விமானப் படை தற்போது எந்த வகையில் பங்களிப்பு செய்கிறது?

பதில்: யுத்தம் முடிவடைந்ததையடுத்து விமானப்படை தற்போது கண்காணிப்பு மற்றும் இடர்காலத்தில் உதவிகள் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே நாம் இப்போது நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பை கடற்படையுடன் சேர்ந்து கண்காணித்து வருகிறோம். கடல் வழியே சட்டவிரோதமாக போதைவஸ்து மற்றும் பொருட்களை கடத்தும் மீன்பிடி வள்ளங்களை கண்டுபிடித்தலில் நாம் ஈடுபட்டுள்ளோம். அத்துடன் கடல் வழியே நாட்டுக்குள் நுழைய முயலும். குறிப்பாக இந்தியாவில் இருந்து வரும் நபர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளிலும் விமானப்படை ஈடுபட்டுள்ளது. இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் நாளாந்தம் இடம்பெறுகின்றன.

கேள்வி: கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் விமானப் படையினர் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கியுள்ளனர். அதுபற்றி விளக்கிக்கூற முடியுமா?

பதில்:கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் நுழைபவர்களை ஆய்வு செய்வதில் விமானப்படையினரே முன்னணியில் உள்ளனர். அவர்களை சோதனை செய்வதற்கான அனைத்து உபகரணங்களும் எம்மிடம் உள்ளன. சீனாவில் இருந்து முதல் தொகுதி மாணவர்கள் இலங்கை வந்த போது அவர்களை விமான நிலையத்தில் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தல் வரை கொண்டு சென்றது விமானப்படையினரே, இந்த திட்டத்தை நாம் வெற்றிகரமாக செயற்படுத்தினோம். அதன் பின் சுமார் 28 ஆயிரம் பேர் நாட்டுக்குள் வந்துள்ளனர். அவர்களை நாம் வழிகாட்டி, பேச்சு நடத்தி கிருமிநாசினி தெளித்து தனிமைப்படுத்த உதவியுள்ளோம். இந்த அனைத்துக்கும் தேவையான உபகரணங்கள் எமக்கு உரிய நேரத்தில் கிடைத்திருந்ததால் நமக்கு எந்தப் பிரச்சினையும் எழவில்லை.

கேள்வி: காடுகளை மீளவளர்த்தல் மற்றும் சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் விமானப்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சிகள் பற்றி கூற முடியுமா?

பதில்: ஆம். இது எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். குப்பைகளை மீள்சுழற்சி செய்வதில் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது நிறையப் பேருக்கு தெரியாது. ஆனால் அதனை நாம் செய்து வருகிறோம். அதேநேரம் காடுகளில் உள்ள வெற்றிடங்களை இனங்கண்டு, மழைக் காலங்களில் அந்த இடங்களில் விதை குண்டுகளை பயன்படுத்தி காடு வளர்ப்புக்கு உதவுகிறோம். விதைகளை களிமண்ணில் குழைத்து அந்த வெற்றிடங்களில் வீசினால் அவை அந்த இடங்களில் முளைக்கும். இந்த செயற்பாடு 50 முதல் 60 சதவீதம் வெற்றியளித்துள்ளதாக எமக்கு கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

கேள்வி: நியு டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் உங்கள் பங்களிப்பு எவ்வாறு அமைந்தது?

பதில்: விமானப் படையினர் நியு டயமன்ட் கப்பலின் தீயை அனைத்து 176 செயற்பாடுகளில் ஈடுபட்டனர். 4 லடசத்து 40 ஆயிரம் தண்ணீர் வாளிகளை நியு டயமன்ட் எண்ணெய்க் கப்பலின் மீது வீசியுள்ளனர்.

அத்துடன் பல கண்காணிப்பு செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர். அத்துடன் தீயின் மீது இரசாயன மூடைகளையம் வீசியுள்ளனர். இதனால் பெரும் சூழல் பேரழிவு ஏற்படுவதை தவிர்க்க முடிந்துள்ளது.

கேள்வி: தற்போது உயர்ந்த கட்டடங்கள் பெருமளவில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த உயர்ந்த கட்டடங்களில் தீப்பிடித்தால் அதனை அணைக்கும் செயற்பாடுகளில் விமானப் படை தயாராக உள்ளதா?

பதில்: இது ஒரு விசேட செயற்பாடாகும். இதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். எனினும் இதுபற்றி நாம் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும். அபிவிருத்தியடைந்த நாடுகளில் இந்த தொழில்நுட்பம் உள்ளது அதனைப் பெறுவதற்கு நாம் முயற்சித்து வருகிறோம். ஆனால் மிகுந்த செலவுள்ள விடயமாகும்.

கேள்வி: ஒழுங்கை விதிகளை நடைமுறைப்படுத்த விமானப் படையினர் பொலிஸாருடன் இணைந்து செயற்படுகின்றனரா?

பதில்: ஆம். போக்குவரத்து செயற்பாடுகளை நாம் டிரோன் மூலம் படம் பிடித்து பொலிஸார் கேட்கும் போது அவர்களுக்கு கொடுத்துதவுகிறோம். இதற்கென ஆளற்ற விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளராக இருந்த போது இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக மேலும் டிரோன்களை கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ளோம்.

 

கமெலியா நெத்தனியல்...
தமிழில்: என். ராமலிங்கம் 


Add new comment

Or log in with...