MT New Diamond கப்பல் கெப்டனை விளக்கமறியலில் வைக்க கோரிக்கை

MT New Diamond கப்பல் கெப்டனை விளக்கமறியலில் வைக்க கோரிக்கை-AG Request to Remand MT New Diamond Captain

தீப்பிடித்த நிலையில் மீட்கப்பட்ட MT New Diamond கப்பல் மாலுமியை விளக்கமறியலில் வைக்குமாறு, சட்ட மாஅதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பாணைக்கு அமைய, இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குறித்த கப்பலின் மாலுமி கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜரானார்.

கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவினால் குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதன்போதே சட்ட மாஅதிபர் சார்பில் கப்பலின் மாலுமியை விளக்கமறியலில் வைக்குமாறு, கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிற்பகல் 2.00 மணியளவில் முடிவை அறிவிப்பதாக, நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடல் மாசுபடுத்தலை தடுக்கும் சட்டத்தின் கீழ், கப்பலின் மாலுமி சந்தேகநபராக பெயரிடப்படுவார் என, குற்றப் புலனாய்வு திணைக்களம் அண்மையில் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

கடந்த செப்டம்பர் 03ஆம் திகதி அம்பாறை, சங்கமன்கண்டியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் வைத்து கப்பலில் ஏற்பட்ட தீப்பிடிப்பு தொடர்பில் உரிய நிறுவனத்திற்கு முறையான தகவல் பரிமாற்ற நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை எனவும், தன்னியக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், சிஐடியால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில், கப்பலின் மாலுமி உள்ளிட்ட குழுவினர் உரிய முறையில் பங்களிப்பு வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...