களுத்துறை, இங்கிரிய, றைகம், மேற்பிரிவு ஸ்ரீ குறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயம் | தினகரன்

களுத்துறை, இங்கிரிய, றைகம், மேற்பிரிவு ஸ்ரீ குறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயம்

இலங்கைத் திருநாட்டில் அம்பாள் வழிபாடு மிகவும் தொன்மையானது. அதிலும் குறிப்பாக மலையகப் பகுதிகளில் மாரியம்மன் வழிபாடு முதலிடத்தை வகிக்கிறது. பழமையான ஆலயங்களோடு நாளுக்கு நாள் புதிய அம்மன் ஆலயங்கள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக பெருவிழாக்கள் பெருவாரியாக நடைபெற்று வருகின்றன.இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, றைகம், மேற்பிரிவு ஸ்ரீகுறிஞ்சி மகா மாரி அம்மன் கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக மக்களின் பேராதரவோடு சிம்மாசனத்தில் அமர்ந்து தனி ராஜ்ஜியம் செய்து வருவது காலத்தின் வரலாறு.கடும் தவமிருந்து இறைவனிடம் அரிய பல வரங்களையும், மகா பலத்தையும் பெற்ற மாரா சூரன் ஆணவமும் , அகங்காரமும் கொண்டு மூவுலகங்களையும் துன்பப்படுத்தினான். அனைவரும் லோக மாதாவான பரா சக்தியிடம் முறையிட்டனர். தேவியும் திருவுளமிரங்கி காத்தருளுவதாக உறுதி பூண்டு, கோபாவேசத்தோடு மாரசுரனின் இரு கால்களையும் பிடித்து மேலே தூக்கி அவனது தலையை பூமியில் அழுத்தி மாரசுரன் பெற்ற வரத்தின் படி மாய்த்தார். தேவர்களும், வானவர்களும் பூ மாரி பொழிந்து நன்றி பெருக்காற்றினர். அன்று முதல் ‘மாரசுரனை மாய்த்தமையால் மாரியம்மன்’ எனும் பெயர் வழங்கலாயிற்று.இப்படி வரம் பெற்ற அன்னை அகிலாண்டேஷ்வரி ஈசனை தவமிருந்து திருமணம் செய்தது தனிக் கதை.   இந்தக் கதை தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருமணஞ்சேரியில் உள்ள உத்வாகநாதர் ஆலயத்தில் நடைபெற்று இருக்கிறது.  

சோழர்களின் ஆட்சிக்காலத்தில் அந்த வம்சத்தின் பேரரசியான செம்பியன் மாதேவியால் கட்டப்பட்டது இக்கோவில். ஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற தலம் இது. பூவுலகில் மனித குல பெண்ணாக பிறந்து சிவபெருமானை மணக்க விரும்பிய பார்வதி தேவி, இந்த தலத்தில் தவம் புரிந்து சிவபெருமானை மணந்ததாக கூறப்படுகிறது. இந்த தெய்வீக திருமணத்தை பார்வதிக்கு சகோதரனாக இருந்து மகாவிஷ்ணுவே நடத்தியதாக தல புராணம் கூறுகிறது. இத்தகைய தெய்வீக திருமணம் நடந்த புனிதஸ்தலம் ஆகியதால் இந்த ஊர் ‘திருமணஞ்சேரி’ என அழைக்கப்பட்டது.  

அந்த ஆலயத்தின் பிடிமண்ணால் ஸ்தாபிக்கபட்டதுதான் களுத்துறை மாவட்டம், இங்கிரிய, றைகம் ஸ்ரீகுறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயம் என்பது நமது ஆலயத்துக்கு கிடைத்திருக்கும் கூடுதல் சிறப்பு. திருமணஞ்சேரி ஆலயத்தில் ஈசன் உத்வாக நாதராகவும், அன்னை கோகிலாம்பாளாகவும் அருள்பாலிக்கிறார்கள்.  

ஊருவிட்டு ஊu;வந்த மக்களோடு திருமணஞ்சேரியிலிருந்து ஒரு பிடிமண்ணாக துணியில் பொட்டலமாக சுற்றப்பட்டு நெடும் பயணம் மேற்கொண்டு பயணித்த அன்னை கோகிலாம்பாள் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, றைகமையில் ஸ்ரீகுறிஞ்சி மகாமாரி அம்மனாக அமர்ந்து இன்று களுத்துறை மாவட்டத்தில் பேராலயமாக உருவெடுத்து இருப்பது அன்னையின் மகிமைதான்.  

ஸ்ரீகுறிஞ்சி மகாமாரி அம்மன் என்ற சிறப்பு பெயரில் அம்பாள் அழைக்கப்பட்டாலும் திருமணஞ்சேரி என்ற புனைப் பெயரும் இவளுக்கு இருக்கிறது. திருமணத் தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு வரம் தரும் தெய்வமாக அம்பாள் இருப்பதால் இவளை நாடி வரும் பக்தர்கள் திருமணஞ்சேரி தாயே! என்று உருகி வேண்டி வரம் பெறுவதால். அம்பாளுக்கு அப்படியொரு சிறப்பு பெயர் வழங்கப்படுகிறது.  

இந்த பேராலயத்தின் கொடிதம்ப பிரதிஷ்டை நிகழ்வு அண்மையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. தேசமான்ய சிவஸ்ரீ குமார விக்னேஷ்வர சிவாச்சாரியாரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருந்திரளான பக்கதர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.  

இதேவேளை, ஸ்ரீகுறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா கடந்த பெப்பரவரி 5ம் திகதி நடைபெற்றதை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் முகமாக கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது.  

இலங்கையில் இதுவரை வெளியான ஆன்மீக நூல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மலர் ஆலயத்தின் தொன்மையையும் அதன் சிறப்புகளையும் எடுத்துக்காட்டுவதோடு, தமிழர் வாழ்வியல், தமிழ் மொழியின் சிறப்புகள், மற்றும் சைவத்தோடு கலந்திருக்கும் அறிவியலையும் மிகவும் சிறப்பாக எடுத்துகாட்டுவதாக படைக்கப்பட்டுள்ளது.  


Add new comment

Or log in with...