இருதரப்பு உறவுகளை மறு ஆய்வு செய்ய இந்திய பிரதமர் எதிர்பார்ப்பு

பிரதமர் மஹிந்தவின் டுவிட்டர் பதிவுக்கு மோடி பதில் பதிவு

இலங்கை- இந்தியாவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மறு ஆய்வு செய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் (24) இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “செப்டெம்பர் 26ஆம் திகதி, திட்டமிடப்பட்ட மெய்நிகர் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாட எதிர்பார்க்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற பகுதிகளிலிருந்து எமது நாடுகளுக்கு இடையிலான பன்முக இருதரப்பு உறவை மறுபரிசீலனை செய்ய எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது, டுவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளதாவது, “இருதரப்பு உறவுகளை விரிவாக மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிந்தைய காலத்தில், இரு நாடுகளும் தங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழியை ஆராய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இந்தியாவின் முதல் மெய்நிகர் உச்சிமாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு ஒன்றைக் காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் உரையாடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் பற்றியோ அல்லது இலங்கையில் முன்னெடுக்கப்படும் அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை சம்பந்தமாகவோ இதன்போது கலந்துரையாடப்படாதென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...