முழுமைப்படுத்த பிரதமர் விசேட பணிப்புரை | தினகரன்

முழுமைப்படுத்த பிரதமர் விசேட பணிப்புரை

அரைகுறை நிர்மாண வீடுகள்;

நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்பட்டு அரைகுறை நிலையிலுள்ள மக்கள் பாவனைக்கு ஒவ்வாத சகல வீடுகளையும் முழுமையாக நிர்மாணித்து உரியவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்தகைய வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்விகள் வேளையில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இவ்வாறு தெரிவித்தார்.

வேலுகுமார் எம்.பி தமது கேள்வியின் போது கண்டி மாவட்டத்தில் பன்வில பிரதேச செயலகப் பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டம் முழுமையடையவில்லை என்பதையும் அதனை நிறைவு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த;

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அந்த நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டதாகவும் தற்போதைய அரசாங்கம்  வீடுமட்டுமன்றி அப்பகுதியில் அடிப்படை வசதிகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

 

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...