அல் - குர்ஆனின் அற்புதம்

(கடந்த வாரத் தொடர்)  

அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை, ‘ஒவ்வொரு இறைத்தூதரும் அற்புதங்களுடன் தான் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த வகையில் எனக்கு அருளப்பட்ட அற்புதம் அல் குர்ஆன்' என்றார்கள்.   (ஆதாரம்: புகாரி)  

குர்ஆனானது அற்புதமாக விளங்குகின்ற அதேநேரம் மனிதனின் ஈருலக வாழ்வின் விமோசனத்திற்கும் சுபீட்சத்திற்கும் நேர்வழிகாட்டும் தெளிவான இறைவழிகாட்டலாகவும் திகழுகின்றது.  

முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன்பு வருகைதந்த இறைத்தூதர்களான மூஸா (அலை), ஈஸா (அலை) போன்ற இறைத்தூதர்களுக்கு அல்லாஹ் அற்புதங்களைத் தனியாகவும், இறைவேதத்தைத் தனியாகவும் வழங்கினான்.  

அந்த வகையில் மூஸா (அலை) அவர்களுக்கு தௌராத் வேதமாகவும், அவரது கைத்தடி (அஸா கோல்) பாம்பாக மாறும் அற்புதம் கொண்டதாகவும் விளங்கியது. அதேபோன்று ஈஸா (அலை) அவர்களுக்கு இன்ஜீல் வேதமாகவும், அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப பார்வை இழந்த குருடர்களுக்கு பார்வை வழங்கவும், தொழு நோயாளர்களைக் குணப்படுத்தக்கூடிய அற்புதத்தையும் பெற்று இருந்தார்கள். இவ்வற்புதங்கள் அனைத்தும் அந்தந்த இறைத்தூதர்களோடு முற்றுப்பெற்று விட்டது. ஆனால் அல் குர்ஆன் இறைவழிகாட்டலாகவும் அற்புதமாகவும் ஒருங்கே விளங்குவதோடு மறுமை வரைக்கும் உயிரோட்டத்துடனேயே இருந்து கொண்டிருக்கும். அது தான் அல்லாஹ்வின் ஏற்பாடு.  

மேலும் அல் குர்ஆனின் அற்புதம் குறித்து விளக்கும் வகையில் அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது ‘அல் குர்ஆனைப் படிக்கும்போது ஒரே விடயம் பல அத்தியாயங்களில் பல தடவைகள் வந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம். அதனால் குர்ஆனை முதலில் படிப்பவர் இதென்ன ஒரே விடயம் திரும்பத் திரும்ப வருகின்றது எனக் கருதுவார். ஆனால் குர்ஆனில் கூறியது கூறல் கிடையவே கிடையாது. குர்ஆனை ஆய்வு செய்பவர் இதனை அறிவர்.  

குர்ஆனில் ஒரு விடயம் திரும்பவும் வருகின்றதென்றால் முன்னும் பின்னும் ஒரே விதமாக அல்லது ஒரே குறியீடுகள், இணைப்புக்களை கொண்டு சொல்லப்படுவதே இல்லை. அதில் இடம், சூழலுக்கு ஏற்ப பொறுத்தமான மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். ஓரிடத்தில் ஒரு விடயம் மறைக்கப்பட்டிருக்கும். மற்றொரு இடத்தில் அவ்விடயம் விளக்கப்பட்டுவிடும். ஓரிடத்தில் அதனுடைய உண்மையான குறியிலக்கு தெளிவுபடுத்தப்படாமல் இருக்கும். மற்றொரு இடத்தில் முன் பின் விளக்கங்களைக் கொண்டு இவ்விலக்கு தெளிவுபடுத்தப்பட்டு விடுகின்றது. எனது அனுபவத்தின்படி,  ஒரு சொல் ஒரிடத்தில் தெளிவான பொருளை அளிக்காது பூடகமாக காட்சி தருகின்ற அதேநேரம், மற்றொரு இடத்தில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுவிடும்.

அதேபோன்று ஒரிடத்தில் முன்வைக்கப்படும் ஆதாரம் விளங்க முடியாத நிலையில் காணப்பட்டாலும் மற்றொரு இடத்தில் அது புலரும் பொழுதைப் போன்று தெள்ளத் தெளிவாகிவிடுகின்றது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.  

முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக அருளப்பட்ட சூரா அலக்கின் ஐந்து வசனங்களையும் எடுத்துப்பார்த்தால் அங்கு ஓதுவீராக! படிப்பீராக என்ற சொல் இரண்டு தடவைகள் இடம்பெற்றிருப்பதை அவதானிக்கலாம். இது குறித்து குர்துபி (ரஹ்) போன்றவர்கள் ‘வாசிப்பு எனும் வணக்கத்தை வலியுறுத்தவே ஒதுவீராக என்ற சொல் இரு தடவைகள் இடம்பெற்றுள்ளது' என்றுள்ளனர். அதேநேரம் இமாம் ராஸி (ரஹ்) போன்றவர்கள் 'அல் குர்ஆனின் ஒவ்வொரு சொல்லும் புதியதொரு கருத்தைத் தருவதாக வாதிடுகின்றனர். இதே கருத்தை கலாநிதி தாஹா ஜாபீர் அலவானி (ரஹ்) போன்ற அறிஞர்கள் ஆதரிக்கின்றனர்.  

அதனால் இந்த ஐந்து வசனங்களையும் எடுத்து நோக்கும் போது இரு தடவைகள் இடம்பெற்றுள்ள இச்சொல் இரு விடயங்களை வலியுறுத்தக்கூடியதாக இருப்பதை அவதானிக்கலாம். ஒன்று அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு தான் படிக்கவோ ஒதவோ ஆரம்பிக்க வேண்டும். அவனது பெயரைக் கொண்டு தான் எந்தவொரு காரியத்தையும் தொடங்க வேண்டும் என்பதை எடுத்துக்கூறுகின்றது.  

மற்றையது அல்லாஹ் மாபெரும் கொடையாளி. அவன் தான் எழுதுகோளைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றை எல்லாம் கற்று கொடுத்திருக்கின்றான். அதனால் அவை தொடர்பில் படிக்க வேண்டும். ஆராய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.  

இவை இரண்டும் மனிதனை ஒரே இலக்கை நோக்கி நகர்த்தும் அற்புதத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. அது தான் அல்லாஹ்வின் நினைவிலிருந்து மனிதன் விலகிச் செல்லாதிருக்க வழிவகுத்திருக்கின்றது. அதாவது அவனில் இறையச்சம் மேலோங்குவதற்கான ஏற்பாடாக அமைந்திருக்கின்றது.  

இவ்வாறு எண்ணிறைந்த அற்புதங்களைக் கொண்டதாக விளங்கும் அல் குர்ஆனின் மகத்துவத்தையும் சிறப்பையும் கொண்டு பயனடைந்திட வேண்டியதே மனிதனின் கடமையும் பொறுப்புமாகும். 

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...