முகமாலையில் மீட்கப்பட்டது பெண் புலியின் எலும்புக்கூடு | தினகரன்


முகமாலையில் மீட்கப்பட்டது பெண் புலியின் எலும்புக்கூடு

அடையாள இலக்கத் தகடுகளும் சிக்கியது

முகமாலை முன்னரங்கில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு முன்னாள் பெண் போராளி ஒருவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது. கிளிநொச்சி -முகமாலை பகுதியை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு செய்து வந்த நிலையில் நேற்றைய தினம் மதியம் 03 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது சோதியா படையணியை சேர்ந்த இரு பெண் போராளிகளின் இலக்க தகடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மண்டையோட்டுடன் கூடிய ஒரு தொகுதி எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டிருந்தன.

விடுதலைப்புலிகளால் வழங்கப்படும் த.வி.பு ஞா 0302 மற்றும் த.வி.பு. ஞ 0188 என்ற அடையாளங்கள் பொறிக்கப்பட்ட இலக்கத்தகடுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் B+ மற்றும் O+ இரத்த வகையைச் சேர்ந்தவர்களது உடல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ் அகழ்வுப் பணிகளின் போது எதிரியிடம் அகப்பட்டால் தமது உயிரை மாய்ப்பதற்காக விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்படும் சைனட் குப்பி ஒன்றும், பெண் போராளிகள் இடுப்பில் அணியும் பட்டியும், உரப்பைகள், விடுதலைப்புலிகளின் வரிச் சீருடைகள், பச்சை நிற சீருடைகள், பாதணி ஒன்று, பற்றிகள், சம்போ போத்தல்கள் போன்றவையும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, துப்பாக்கி ஒன்று, இரண்டு கைக்குண்டுகள், 08 மகசின், 03 கோல்சர் கவர் போன்றவையும் இந்த சந்தர்ப்பத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினமும் தொடர்ந்தும் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்க கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...