விளையாட்டுத்துறைக்கு பொருத்தமான அமைச்சர்

நாமலுக்கு சார்ள்ஸ் MP பாராட்டு

பொருத்தமான நபருக்கு பொருத்தமான அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எமது வாழ்த்துகளை தெரிவிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்காக விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய அவர் இடையீட்டு கேள்வியொன்றை முன்வைக்கையில் இவ்வாறு கூறினார். முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு மைதான பணி ஆரம்பிக்கப்படாதது குறித்தும் மன்னார் மாவட்ட விளையாட்டு மைதான பணிகள் ஸ்தம்பிதமாகியுள்ளது பற்றியும் மன்னார் எமில் நகர மைதானப் பணி ஆரம்பிக்கப்படாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்..

இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், முல்லைதீவு,மன்னார் மாவட்ட மைதானங்கள் மற்றும் மன்னார் நகர எல்லையிலுள்ள எமில் நகர பொது விளையாட்டு மைதானம் என்பவற்றை நிர்மாணிக்க அமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் 2021 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு கோருகிறேன் என்றார்.

இரு வாரங்களுக்கு முன்னர் நான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தேன்.முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் பகுதிகளில் எமது மக்களின் விவசாய நிலங்களை மகாவலி அதிகார சபை அதிகாரிகள் விவசாயம் செய்ய விடாமல் தடுத்துள்ளமை பற்றியும் கூறினேன்.

இதனை கண்காணிக்க அதிகாரிகளை அனுப்புமாறு கோரினேன். அவர்களுக்கு தமது சொந்த இடத்தில் விவசாயம் செய்ய முடியாதுள்ளது. இது பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...