2020 A/L பரீட்சை ஒக்டோபர் 12 முதல் நவம்பர் 06 வரை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு உத்தரவு

2020 க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இந்த பரீட்சைக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,648 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பரீட்சை நிலையங்களாக இயங்கவுள்ள பாடசாலைகளில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பரீட்சைகள் திணைக்களத்தினால் சுகாதார அமைச்சு, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு, மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர்களுடன் இணைந்து மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் உரிய பாடசாலைகளின் அதிபர்கள், பெற்றோரின் உதவியுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் இடம்பெறவிருந்த க.பொ.த. சாதாரணதர பரீட்சை, அடுத்த வருடம் ஜனவரி 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

வழமை போன்று இவ்வருடம் டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்த க.பொ.த. சாதாரணதர பரீட்சை, அடுத்த வருடம் ஜனவரி 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதேவேளை ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, 2020 ஒக்டோபர் 10 முதல் 2020 நவம்பர் 08 வரை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இவ்வருடத்தின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2020 நவம்பர் 09 ஆரம்பமாகி 2020 டிசம்பர் 23 அன்று முடிவடைவதோடு, டிசம்பர் 24 முதல் ஜனவரி 01ஆம் திகதி வரை 3ஆம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் பாடசாலையின் முதலாம் தவணை ஜனவரி 04ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வருடத்திற்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் (2021 ஜனவரி 18 - 27) மாணவர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு, ஜனவரி 01 முதல் 17 வரை, கற்றலுக்கான விடுமுறை வழங்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குப் பின், பாடசாலைகள் 2021 பெப்ரவரி 01 இல் மீண்டும் திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்க்கது.


Add new comment

Or log in with...