கிராம சேவகர்கள் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம் | தினகரன்

கிராம சேவகர்கள் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம்

கிராம சேவகர்கள் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம்-Public Service Day of Grama Niladhari Changed

கிராம சேவகர்களின் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் அமைச்சரவையினால் புதன்கிழமைக்கு பதிலாக, திங்கட்கிழமையை பொதுமக்கள் தினமாக அறிவிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை அடுத்து, பொதுமக்கள் தினத்தில் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே திங்கட்கிழமைகளில் இருந்த பொதுமக்கள் சேவை தினத்திற்கு பதிலாக செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்கள் சேவை தினம் மாற்றப்பட்டுள்ளது.

16/2020 எனும் இலக்கம் கொண்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் குறித்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக, அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, செவ்வாய், வியாழக்கிழமைகளில் மு.ப. 8.30 - பி.ப. 4.15 வரையும், சனிக்கிழமைகளில் மு.ப. 8.30 - 12.30 மணி வரையும் பொதுமக்கள் சேவை தின நேரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த நேரத்தில் கிராம சேவகர்கள் தங்களது அலுவலகங்களில் கடமையில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளகப்‌ பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள்‌ மற்றும்‌ அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் (சமல் ராஜபக்ஷ) செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால், குறித்த சுற்றுநிரூப விடுக்கப்பட்டுள்ளது.‌

இதேவேளை, திங்கட்கிழமைகளில், பிரதேச செயலகங்களினால் விடுக்கப்படும் அழைப்புகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் எனவும் ஏனைய மீதமுள்ள 3 நாட்களில் ஒரு நாள் விடுமுறை எடுப்பதற்கும் மீதமுள்ள 2 நாட்களை கள விஜயத்திற்காக பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சேவகர்கள், தங்களது ஓய்வு நாட்களைத் தவிர, ஏனைய 6 நாட்களும் 24 மணிநேரமும், தங்கள் பிரிவில் தங்கள் கடமைகளைச் செய்ய கடமைப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து அந்தந்த பிரிவுகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமாகும் எனவும் அறவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...