புலம்பெயர் அமைப்புகள் பாராளுமன்றம் வர வாய்ப்பு | தினகரன்

புலம்பெயர் அமைப்புகள் பாராளுமன்றம் வர வாய்ப்பு

விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள புலம்பெயர் அமைப்பினரும் அதிகளவில் இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர். 20 ஆவது திருத்தத்தில் இரட்டைக் குடியுரிமையுள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதன் மூலம் புலம்பெயர் அமைப்புக்களும் பாராளுமன்றம் வரலாம் என பொதுபல சேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் பிரதான இரு கட்சிகளும் ஆட்சியமைக்கும்போது தங்களுக்குத் தேவையான விதத்தில் அரசியமைப்பினை திருத்தம் செய்கிறார்கள் .இதனால் அரசாங்கத்துக்கு நன்மை ஏற்பட்டதே தவிர நாட்டுக்கு எவ்வித அபிவிருத்திகளோ மாற்றங்களோ ஏற்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியமைப்பின் 17ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய அரசியல்வாதிகள் 18ஆவது திருத்திற்கும், 19 ஆவது திருத்திற்கும் ஆதரவு வழங்கினார்கள் எனவும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் கடந்த காலங்களில் அரச மற்றும் சமூக மட்டத்தில் பிரதான பேசுபொருளாக காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், 19ஆவது திருத்தத்தை ஆதரித்த அரசியல்வாதிகள் அரசியல் தேவைகளுக்காக அதனை எதிர்க்கவும் ஆரம்பித்தார்கள்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்துச்செய்து புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய நிலையில் தற்போது 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தத்தில் இரட்டைக் குடியுரிமையினைக் கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் நாட்டில் இல்லாதொழிக்கப்பட்டாலும் அவர்களின் பிரிவினைவாதக் கொள்கையானது உலகம் முழுவதும் வியாபித்துள்ளது .இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் பங்குப்பற்ற முடியும் என்பதை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நிச்சயம் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்.சீனர்கள், இந்தியர்களும் எதிர்காலத்தில் இலங்கை பாராளுமன்றில் உறுப்பினராக செயற்படுவார்கள் என்பதில் எவ்வித ஆச்சரியமும் கிடையாது என்ற நிலையில் அரசாங்கம் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

 

 


Add new comment

Or log in with...