20 ஆவது திருத்தம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு | தினகரன்

20 ஆவது திருத்தம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

- எதிராக நீதிமன்றம் நாடினால் 21 நாட்களின் பின்னரே விவாதம்

அரசியலமைப்பு 20ஆவது திருத்தம் நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21நாட்களுக்கு 20வது திருத்தம் தொடர்பில் எந்த முன்னெடுப்பையும் பாராளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாது என பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தவெல கூறினார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நாளை பாராளுமன்றத்தில் முதலாவது வாசிப்புக்காக எடுத்துக்கொள்ள இருக்கும் நிலையில் அதன் பின்னர் இடம்பெற இருக்கும் சம்பிரதாய வழிமுறை தொடர்பாக தெளிவுபடுத்தும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த பின்னர்,ஒரு வாரத்தினுள் அதனை சவாலுக்குட்படுத்தி எந்தவொரு பிரஜைக்கும் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடியும். அவ்வாறு யாரும் சவாலுக்குட்படுத்தாவிட்டால் 20ஆவது திருத்தம் 7நாட்களுக்கு பின்னர் பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும்.

யாரேனும் குறிப்பிட்ட காலத்துக்குள் 20ஆவது திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்ட திகதியில் இருந்து 21நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை வழங்கவேண்டும். இந்த காலப்பகுதியில் இந்த சட்டமூலம் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் பாராளுமன்றத்துக்குள் மேற்கொள்ள முடியாது.

ஆனால் உயர் நீதிமன்றம் 21நாட்களை எடுத்துக்கொள்ளாமல் அதற்கு முன்னர் தீர்ப்பை வழங்கினால், அதன் பிறகு 20 ஆவது திருத்தம் 2ஆம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு இடம்பெறுவதுடன் அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவேண்டும்.

அதனைத்தொடர்ந்து செயற்குழுவில் 20ஆவது திருத்த சட்டமூலத்தில் இருக்கும் அனைத்து சரத்துக்களும் ஒவ்வாென்றாக ஆராய்ந்து பார்ப்த்து திருத்தங்களை முன்வைக்க முடியும்.

தொடர்ந்து சட்டமூலத்தின் 3ஆம் வாசிப்பு இடம்பெறும். 3ஆவது வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு இடம்பெறும்.

இதன்போதும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்படவேண்டும். அதன்போது சட்டமூலம் அரசியலமைப்பாக அங்கிகரிக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.

20ஆவது திருத்தத்தில் முழு திருத்தத்தையும் அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உட்பிரிவுகளை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பும் தேவை என்ற தீர்மானத்துக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்ல நேரிடும்.

இல்லாவிட்டால் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு சென்று நிறைவேற்ற வேண்டிய பிரிவுகளை கைவிட்டு, ஏனைய சரத்துக்களை நிறைவேற்றவும் முடியும் என பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தவெல கூறினார்.


Add new comment

Or log in with...