நிந்தவூரில் மூவருக்கு கௌரவம் | தினகரன்


நிந்தவூரில் மூவருக்கு கௌரவம்

45 ஆவது தேசிய விளையாட்டு விழா

இலங்கையின் தேசிய விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் ஏற்பாடு செய்திருந்த 45வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த வருடம் இறுதி நிகழ்வுகள் கடந்த வருடம் அக்டோபர் 25ஆம் திகதியன்று பதுளை வின்சன்ற் டயஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பரிது வட்டம் வீசுதல் மற்றும் கபடி ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு கிழக்கு மாகாணத்திற்கு பெருமை தேடித்தந்த நிந்தவூரைச்சேர்ந்த மூவரிற்கு கடந்த (14) அம்பாறை ஹார்டி வளாக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கிழக்கு மாகாண வர்ண விழா நிகழ்வின் போது பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரரும், இலங்கை இராணுவத்தின் இயந்திரவியல் மற்றும் மின்பொறியியல் படைபிரிவின் வீரரும், தேசிய மெய்வலுனர் அணியின் வீரருமான இசட்.ரி.எம். ஆஷிக் கடந்த வருடம் இடம் பெற்ற 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்டுத்தி பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் 45.59 மீற்றர் தூரம் எறிந்து, தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் 1ஆம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இவர் இலங்கை மெய்வல்லுனர் தேசிய அணியில் இடம்பிடித்துள்ள கிழக்கைச் சேர்ந்த வீரர்களில் இவரும் ஒருவர் என்பதுடன், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் இலங்கை குழாமிற்கு உள்வாங்கப்பட்டுள்ளார். மேலும் இவரது சாதனைகள் நிந்தவூர் வரலாற்றிலும், அம்பாறை மாவட்டத்திலும் முதன்மையாகவுள்ளது.

அத்துடன் இந்த விளையாட்டு நிகழ்வில் கிழக்கு மாகாணத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்திய கபடி அணி 2 ஆம் இடத்தைப் பெற்றிருந்தது. இதில் அவ்வணி சார்பாக கலந்து கொண்ட நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரரும், தேசிய கபடி அணி வீரரும், பாடசாலை பயிற்றுவிப்பாளருமான எம்.ரி. அஸ்லம் சஜாவும் கௌரவிக்கப்பட்டார். இவர் இலங்கை கபடி தேசிய அணியில் இடம்பிடித்த கிழக்கு மாகாண வீரர் என்பதுடன், இவ்வணியின் மிகவும் முக்கியமான (ரைடர்) வீரராகவும் திகழ்கின்றார். கடந்த 06 ம் திகதி இலங்கை கபடி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட கபடி பயிற்றுவிப்பாளர் தரப்படுத்தல் ஏ பிரிவிலும் இவர் இடம்பிடித்து கிழக்கு மாகாணத்திற்கும், அம்பாறை மாவட்டத்திற்கும், தனது சொந்த ஊரான நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்திலிருந்து இலங்கை கபடி சம்மேளனத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அனஸ் அஹமட்டும் இந்நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை வரலாற்றில் முதலாவது முஸ்லிம் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன், தேசிய கபடி அணியின் மத்தியஸ்தராகவும், அம்பாறை மாவட்ட கபடி சம்மேளனத்தின் தலைவராகவும் கடமையாற்றுகின்றார். அத்துடன் கடந்த 06 ம் திகதி இலங்கை கபடி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட கபடி பயிற்றுவிப்பாளர் தரப்படுத்தல் ஏ பிரிவிலும் இவர் இடம்பிடித்து கிழக்கு மாகாணத்திற்கும், அம்பாறை மாவட்டத்திற்கும், தனது சொந்த ஊரான நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையிலேயே இம்மூவரும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தியினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

நிந்தவூர் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...