வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் இருவரை மோதியது | தினகரன்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் இருவரை மோதியது

ஒருவர் பலி; மற்றுமொருவர் படுகாயம்

மட்டக்களப்பு - செங்கலடி நகரில்  இடம்பெற்ற  வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பக்கமிருந்து வாழைச்சேனை நோக்கிப் பயணித்துகொண்டிருந்த கார் ஒன்று வலது பக்க வீதியோரத்தால் நடந்து சென்றுகொண்டிருந்த நபரையும் சைக்கிளில் சென்ற மற்றுமொரு நபரையும் மோதிச் சென்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் இருவரை மோதியது-Accident-Killed a Person On the Spot-and Another Injured-Chenkaladi-Batticaloa

நேற்று (18) இடம்பெற்ற இவ்விபத்து குறித்து தெரிவிக்கப்படுவதாவது,

வேகமாக பயணித்த கார் வண்டி அப்பிரதேச வீதியிலுள்ள பாதசாரிகள் கடவையில் சென்ற நபருக்கு இடமளிப்பதற்காக வேகத்தைக் குறைத்தவேளை அந்த கார் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வலது புறத்திற்குச் சென்று, வீதியோரத்தால் சென்ற நபர்கள் இருவரை வேகமாக மோதியுள்ளது.

இதில் தூக்கிவீசப்பட்ட இருவரில் ஒருவர் ஸ்தலத்திலேயெ உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் இருவரை மோதியது-Accident-Killed a Person On the Spot-and Another Injured-Chenkaladi-Batticaloa

இம்மயிர்க் கூச்செறியும் விபத்து அப்பிரதேச வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த சீசீரீவீ கெமராவில் பதிவாகியுள்ளது.

இவ்விபத்தினால் அங்கிருந்த வர்த்தக நிலையமொன்றும் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளன.

இவ்விபத்தில் காயமடைந்தவர் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தினையடுத்து அப்பிரதேசத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகன நெரிசல் ஏற்பட்டது.

காரை செலுத்திய நபரை, ஏறாவூர்ப் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

(ஏறாவூர் நிருபர் -நஸார் மொஹமட் கௌஸ்)


Add new comment

Or log in with...